×

விராட்டிபத்துவிற்கு மாற்றும் திட்டமும் ‘அவுட்’ ஆனதால் மீன் மார்க்கெட்டில் தேங்கும் கழிவுநீரால் கரிமேடு மக்களுக்கு துர்நாற்றம் நிரந்தரம்

மதுரை, மே 30: மீன் மார்க்கெட்டை விராட்டிபத்துவிற்கு மாற்றும் திட்டம் அவுட் ஆனதால் கரிமேடு மீன் மார்க்கெட்டில் தேங்கும் கழிவுநீரால் அப்பகுதி மக்களுக்கு துர்நாற்றம் நிரந்தரமாகி விட்டது. அடிப்படை வசதியையும் மாநகராட்சி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 மதுரை மாநகரில் அதிகரித்து வந்த போக்குவரத்து நெரிசலால் மாட்டுத்தாவணியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கடந்த 1999ல் திறக்கப்பட்டு தற்போது எம்ஜிஆர் பஸ்ஸ்டாண்டாக செயல்படுகிறது. அதுபோல ஆம்னி பஸ்களால் ஏற்பட்ட இடையூறுகளால் மாட்டுத்தாவணியில் ஆம்னி பஸ்ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது. மேலும் நகருக்குள் இருந்த பழக்கடைகளால் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது.

இதனால் பழக்கடைகளும் மாட்டுத்தாவணியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திறக்கப்பட்டது. அந்த அடிப்படையில் ஜெயில் ரோட்டில் கரிமேடு பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டால் போக்குவரத்துக்கு கடும் இடையூறு ஏற்பட்டு வருவதோடு, அப்பகுதி முழுவதும் துர்நாற்றமும் வீசி வருகிறது. இங்கு அடிப்படை வசதிகள் செய்யாததால் கழுவிவிடப்படும் கழிவுநீர் மார்க்கெட் முன்பாக தேங்கிக்கிடக்கிறது. துர்நாற்றமும் தொடர்ந்து வீசி வருகிறது. இதனை விராட்டிபத்துவில் சுத்திகரிப்பு நிலையம் அருகே உள்ள பகுதியில் ரூ.3 கோடி செலவில் மீன் மார்க்கெட் மாற்றி அமைக்க மாநகராட்சி திட்டமிட்டது. தற்போது அங்கு மேற்கு தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு செயல்படுகிறது.

இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால் விராட்டிபத்துவிற்கு மீன் மார்க்கெட்டை கொண்டு செல்லும் திட்டத்தை கடைசியாக மாநகராட்சி கைவிட்டது. இதனால் திட்டமும் அவுட் ஆனது. இதனால் கரிமேடு மீன் மார்க்கெட்டில் ஏற்படும் துர்நாற்றம் அப்பகுதி மக்களுக்கு நிரந்தரமாகி விட்டது. மீன்மார்க்கெட்டிற்கு தமிழக கடலோரப்பகுதி, கேரளா மற்றும் ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து லாரிகளில் மீன்கள் டன் கணக்கில் இங்கு கொண்டு வரப்பட்டு இறக்கி வைக்கப்படுகின்றன.

மீன்கள் வெட்டி சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வேலைகள் நடைபெறுவதால் மீன் கழிவுநீர் வெளியேறுகின்றன. இந்த கழிவுநீர் மோதிலால் மெயின் ரோட்டில் தேங்கி விடுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பல நேரங்களில் புதுஜெயில் ரோட்டிலும் கழிவுநீர் தேங்கி விடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, அப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அங்கு குடியிருக்கும் மக்களுக்கு தொற்று நோய் பரவும் ஆபத்தும் உள்ளது. ஆனால் எந்த அடிப்படை வசதியும் மீன் மார்க்கெட்டிற்கு மாநகராட்சி செய்யாததால் வழக்கம் போல கழிவுநீர் தேங்கும் அவலம் தொடர்கதையாகி வருகிறது.

Tags : Viratipattu ,
× RELATED விராட்டிபத்துவில் அமைந்துள்ள ஆரம்ப...