×

மஞ்சூர்-ஈரோடுக்கு நேரடி பஸ் இயக்க கோரிக்கை

மஞ்சூர், மே 30: மஞ்சூரில் இருந்து ஈரோட்டிற்கு நேரடி பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதி பொது மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஊட்டி தாலுகாவில் இருந்து குந்தா தாலுகா பிரிக்கப்பட்டு 10 ஆண்டுக்கும் மேலாகிறது. கீழ்குந்தா, பிக்கட்டி பேரூராட்சிகள், குந்தா, பாலகொலா, முள்ளிகூர், இத்தலார் ஊராட்சிகளை உள்ளடக்கி இத்தாலுகாவில் 100க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளது. சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  இப்பகுதியில் ஏராளமான தேயிலை தொழிற்சாலைகள், அரசு, தனியார் அலுவலகங்கள், பள்ளிகள், மின் நிலையங்கள் உள்ளது.

இப்பகுதியில் ஈரோடு உள்பட வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். மேலும் குந்தா பகுதியை சேர்ந்த ஏராளாமான மாணவ, மாணவிகள் ஈரோடு பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்றனர். அது மட்டுமின்றி குந்தா பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் கூலித்தொழிலாளர்கள் பெரும்பாலானோருக்கும் திருச்சி, துறையூர் உள்ளிட்ட பகுதிகள் சொந்த ஊராக உள்ளது. இந்நிலையில் தாலுகாவின் தலைமையிடமான மஞ்சூரில் இருந்து அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஊட்டி, குன்னுார் மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் ஈரோடு மற்றும் அதன் அருகே உள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் ஊட்டி, கோவை போன்ற இடங்களுக்கு சென்று அங்கிருந்து மாற்று பேரூந்துகள் மூலம் செல்ல வேண்டியுள்ளது. இதனால் கால விரயமும், கூடுதல் செலவினங்களும் ஏற்படுகிறது. எனவே குந்தா பகுதி பொதுமக்களின் போக்குவரத்து நலன் கருதி மஞ்சூரில் இருந்து ஈரோட்டிற்கு நேரடியாக அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.

Tags :
× RELATED தொட்டபெட்டா வனத்தில் காட்டு தீ