×

ரவுடிக்கு 10 மாத சிறை தண்டனை போலீஸ் துணை கமிஷனர் உத்தரவு

கோவை, மே 30: கோவையில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடிக்கு 10 மாத சிறை தண்டனை வழங்கி போலீஸ் துணை கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார். கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் வினோத் (எ) ஆவிவினோத் (38). இவர் மீது கொலை, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஜாமீனில் வெளியே இருந்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகி வருகிறார்.

இந்நிலையில், பொது அமைதியை காக்கும் பொருட்டு சட்டப்பிரிவு 110-ன் படி நிர்வாக நடுவர் மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனர் பாலாஜி சரவணன் முன்பு கடந்த மார்ச் 28ம் தேதி வினோத் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது 110 பிரிவின் கீழ் நான் எந்த தவறும் செய்ய மாட்டேன் என உறுதி மொழி பத்திரத்தில் வினோத்திடம் எழுதி வாங்கி விட்டு பாலாஜி சரவணன் அவரை எச்சரித்து அனுப்பினார்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி புலியகுளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வினோத் தன்னை வழிமறித்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து வினோத் கைது செய்யப்பட்டார். மேலும் எழுதி கொடுத்த ஆவணத்தினை மீறி குற்ற செயல்களில் ஈடுபட்டதால் நிர்வாக நடுவர் அந்தஸ்தில் உள்ள துணை கமிஷனர் பாலாஜி சரவணன் வினோத்திற்கு 10 மாதம் ஜாமீனில் வெளிவரமுடியாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : Rowdy ,Police Deputy Commissioner ,
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...