×

அதிகாரிகள் அலட்சியத்தால் ஓட்டல், டீக்கடைகளில் பாலிதீன் பயன்பாடு மீண்டும் அதிகரிப்பு

திருவள்ளூர், மே 30: ஓட்டல்கள், டீக்கடை உட்பட பல்வேறு இடங்களில் உணவு பரிமாற, பார்சலுக்கு பயன்படுத்திய பாலிதீன், சில்வர் கோட்டிங் பேப்பர்கள் தடை செய்யப்பட்டன. இதனால் வாழை இலை விற்பனை அதிகரித்தது. தற்போது மீண்டும் பாலிதீன் பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பால் வாழை இலை விற்பனை சரிந்து வருகிறது. உடல் நலத்தை கெடுக்கும் பாலிதீனில் தயாரிக்கும் கேரி பேக் உட்பட 14 பொருட்களை அரசு தடை செய்தது. கேரி பைக்கு மாற்றாக பேப்பர் பைகளை வியாபாரிகள் பயன்படுத்துகிறார்கள். அதிகாரிகள் கண்காணிக்காததால் சில ஓட்டல்களில் உணவு, வடைகள் பரிமாற சில்வர் கோட்டிங் பேப்பர் மற்றும் டீ, காபி, சாம்பார் பார்சல் செய்ய பாலிதீன் பைகள் பயன்படுத்த துவங்கி விட்டனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘’திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வாழை சாகுபடி அதிகம் நடக்கிறது. ஓட்டல்கள், கல்யாண வீடுகளுக்கு உணவு பரிமாற தேவையான வாழை இலைகளை உற்பத்தி செய்து வழங்குகிறோம்.
இலைகள் வளர்ந்த பின் வெட்டி அகலம், உயரத்திற்கு ஏற்ப தரம் பிரித்து கட்டுவோம். ஒரு கட்டுக்கு 250 இலைகள் வைத்து சப்ளை செய்து வந்தோம். பாலிதீன் தடைக்கு பின் வாழையிலை விற்பனை நன்றாக இருந்ததால் லாபம் கிடைத்தது. ஓட்டல்களில் மீண்டும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்துவதால் வாழை இலை விற்பனை சரிந்துள்ளது. உணவு பரிமாற பயன்படும் பாக்குமட்டை உட்பட பிற பொருட்களை விட வாழையிலை விலை குறைவு. கையாள எளிதாக இருப்பதால் பலர் பாலிதீன், சில்வர் பேப்பர்களை வாங்குகின்றனர். ஆரோக்கியம் தரும் வாழை இலையை மக்கள் பயன்படுத்தினால் விவசாயிகள் வாழ்க்கை பசுமையாகும்’ என்றனர்.

Tags : hotels ,
× RELATED இன்று காதலர் தினம் கொண்டாட்டம் புதுவை ஓட்டல்களில் சிறப்பு சலுகைகள்