×

மேலக்கோட்டையூர் - கல்வாய் சாலையோரத்தில் இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம் பொதுமக்கள் கடும் அவதி

கூடுவாஞ்சேரி, மே 30: மேலக்கோட்டையூர் - கல்வாய் சாலையோரத்தில் வீசப்படும் இறைச்சி கழிவுகளால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேலக்கோட்டையூர் - கல்வாய் சாலை, வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் தொடங்கி, கூடுவாஞ்சேரி - நெல்லிக்குப்பம் சாலையில் 10 கிமீ தூரத்தில் இணைகிறது. இந்த சாலையில் கண்டிகை, மேலக்கோட்டையூர், ராஜிவ் காந்தி நகர், மல்ரோசாபுரம், நல்லம்பாக்கம், கீரப்பாக்கம், முருகமங்கலம், மேட்டுபாளையம், குமிழி, ஒத்திவாக்கம் உள்பட பல்வேறு கிராமங்கள் உள்ளன. சமீபத்தில் ₹5 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட மேலக்கோட்டையூர் - கல்வாய் சாலையோரத்தில், சிலர் இறைச்சி கழிவுகளை வீசி செல்கின்றனர். இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம், பொதுமக்கள் பலமுறை புகார் கூறியும், எல்லை பிரச்னையை காரணம் காட்டி நடவடிக்கை எடுக்க மறுப்பதாக, பொதுமக்கள் சரமாரியாக புகார் கூறுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில். பல்வேறு பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகள் மேலக்கோட்டையூர் - கல்வாய் சாலையோரத்தில் போட்டி போட்டு கொண்டு கொட்டுகின்றனர். இதனை அப்பகுதியில் சுற்றி திரியும் ஏராளமான பன்றிகள் மற்றும் தெரு நாய்கள் கிளறி விடுவதுடன், தூக்கி சென்று சாலையில் போடுகின்றன. அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், கடும் துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பிடித்து கொண்டு செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சாலையின் குறுக்கே பன்றிகளும், தெரு நாய்களும் இறைச்சியின் கழிவுகளை தூக்கி கொண்டு ஓடுவதால், பைக்கில் செல்வோர், அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களும் அச்சத்துடன் கடக்கின்றனர்.  இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை. மேலக்கோட்டையூர் திருப்போரூர் ஒன்றியம் மற்றும் தாலுகாவில் அமைந்துள்ளது. மற்ற பகுதிகள் அனைத்தும் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் மற்றும் செங்கல்பட்டு தாலுகாவில் அடங்கியுள்ளன. இதனால், இந்த விவகாரத்தில், யார் நடவடிக்கை எடுப்பது தெரியாமல் எல்லை பிரச்னையை காரணம் காட்டி அதிகாரிகள் ஒதுக்கி கொள்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், இந்த விவகாரத்தில் கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : public ,roadside roads ,
× RELATED செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம்