×

கார் உரிமையாளர் எரித்து கொலை ஜி.ஹெச்சை முற்றுகையிட்டு உறவினர்கள் மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு

திருச்சி, மே 29: திருவெறும்பூர் அருகே கார் உரிமையாளர் எரிக்கப்பட்டு காரில் இறந்து கிடந்தார். இதனை கொலை வழக்காக பதிவு செய்ய கோரி உறவினர்கள், எஸ்டிபிஐ கட்சியினர் திருச்சி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவெறும்பூர் அருகே காட்டூர் பாத்திமாபுரத்தை சேர்ந்தவர் குலாம் தஸ்கர் தாஹிர். இவரது மகன் அப்பாஸ்அலி(34). இவர் சொந்தமாக ஆம்னி கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் அப்பாஸ்அலி காரில் வெளியே சென்றார்.

இதற்கிடையே, அப்பாஸ்அலியின் கார் காட்டூர் மஞ்சத்திடல் பாலத்திலிருந்து பாப்பாக்குறிச்சி செல்லும் சாலையில் நிற்பதாக அவரது வீட்டுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அப்பாஸ்அலி குடும்பத்தினர் வந்து பார்த்தபோது அப்பாஸ்அலி காருக்குள் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.  இச்சம்பவம் குறித்து அப்பாஸ்அலி குடும்பத்தினர் திருவெறும்பூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று அப்பாஸ்அலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காருக்குள் எரிந்த நிலையில் கிடந்த 5 லிட்டர் மண்ணெண்ணெய் கேனையும் போலீசார் கைப்பற்றினர்.

அப்பாஸ் அலி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட அப்பாஸ்அலிக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். அவர் எஸ்டிபிஐ கட்சி உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் அப்பாஸ்அலி உடல் வைக்கப்பட்டுள்ள திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்று குவிந்த அவரது உறவினர்கள் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர், அப்பாஸ் அலியின் தலையில் காயங்கள் உள்ளது. அவரை மர்ம நபர்கள் அடித்து கொன்று எரித்துள்ளனர். எனவே கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும்.

அதுவரை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என கூறி மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் அரசு மருத்துவமனை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரேத பரிசோதனை நடத்தினால் உண்மை தெரியவரும் என போலீசார் தெரிவித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து அப்பாஸ் அலி உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். அப்பாஸ் அலி சென்ற வழிதடங்களில் கேமராக்கள் எதுவும் உள்ளதா என சோதனையிட்டு வருகின்றனர்.

Tags : car owner ,
× RELATED 5 லட்சம் கடனை கேட்க சென்ற தனியார்...