×

திருச்செங்கோடு ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிப்பு

திருச்செங்கோடு, மே 29: போதிய மழையில்லாததால் திருச்செங்கோடு ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் உள்ள ஆழ்துளை கிணறுகளின் பழுதடைந்த மின்மோட்டார், அடிபம்புகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் போதிய மழையில்லாததால் கோடை தொடக்கத்திலேயே நீர்நிலைகளில் தண்ணீர் வற்றிப்போனது. மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் வறண்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போனது. காவிரி குடிநீரும் பொதுமக்களுக்கு போதிய அளவு வழங்க முடியவில்லை. திருச்செங்கோடு ஒன்றிய பகுதியில் உள்ள கிராமங்களில் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளின் தண்ணீரை மக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் போதிய மழையில்லாததால் ஆழ்துளை கிணறுகளும் வறண்டு வருகின்றன. பனை, தென்னை மரங்கள் கடும் வெயிலால் காய்ந்து வருகின்றன. மேய்ச்சல் இல்லாததால் காசு கொடுத்து தீவனம் வாங்க முடியாதவர்கள் தங்களின் ஆடு, மாடுகளை சந்தையில் கிடைக்கும் விலைக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

திருச்செங்கோடு ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் ஆழ்துளை கிணறுகளின் மின்மோட்டர் மற்றும் அடிபம்புகள் பழுதடைந்துள்ளன. இதனால் பயன்பாட்டில் உள்ள ஆழ்துளை அடிபம்புகளை தேடி மக்கள் காலி குடங்களுடன் படையெடுத்து வருகின்றனர். பல மணி நேரம் கத்திரி வெயிலில் காத்திருந்து தண்ணீர் பிடித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. சிலர் கூட்டத்தை தவிர்க்க இரவு நேரத்தில் ஆழ்துளை அடிபம்புகளுக்கு சென்று தண்ணீர் பிடித்து வருவதால் மறுநாள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுத்து கிராமங்களில் தண்ணீர் உள்ள கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளின் பழுதடைந்த மின்மோட்டர்கள் மற்றும் அடிபம்புகளை சரிசெய்திட வேண்டும் என்பது மக்களின்  கோரிக்கையாக உள்ளது.

Tags : villages ,
× RELATED கர்நாடகாவில் இவிஎம் உடைக்கப்பட்ட...