×

போக்சோ சட்டத்தில் சஸ்பெண்டான தலைமை ஆசிரியருக்கு மீண்டும் வேலை கிராம மக்கள் எதிர்ப்பு

தேனி, மே 29: தேனி மாவட்டம் கடமலை மயிலாடும்பாறை ஒன்றியத்திற்கு உட்பட்ட காமன்கல்லூர் கிராமத்தினர் நேற்று தேனி கலெக்டர் அலுவலகம் வந்தனர். கலெக்டர் பல்லவிபல்தேவிடம் அளித்த மனுவில், ‘‘காமன்கல்லூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தவர் ரவிச்சந்திரன். இவர்மீது பள்ளி மாணவியர்களை பாலியல் தொந்தரவு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணையில் மாணவியர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2017ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி சஸ்பெண்டு செய்யப்பட்டார். இவ்வழக்கு தேனி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தலைமை ஆசிரியரின் செல்வாக்கால் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, காவல்நிலையத்தில் போக்சோ பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை போலீசார் தவறான வழக்கு என பதிவு செய்துள்ளனர். இதனை ஆதாரமாக கொண்டு தலைமை ஆசிரியர் காமன்கல்லூர் பள்ளியில்  மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

கல்வித் துறையை சேர்ந்த அதிகாரிகள் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரனுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சஸ்பெண்டு செய்யப்பட்ட ஆசிரியரின் மீள்பணியேற்பு ஆணையை ரத்து செய்ய வேண்டும். தலைமை ஆசிரியருக்கு உறுதுணையாக செயல்பட்ட மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.

Tags : residents ,
× RELATED வாய்க்கால் பாலம் இடிப்பு விவகாரம்: இரவு நேரத்தில் பொதுமக்கள் போராட்டம்