×

முறையாக பணம் பட்டுவாடா செய்யாததால் ஆத்திரம் மாவட்ட முழுவதும் அதிமுக நிர்வாகிகளை மாற்ற தொண்டர்கள் வலியுறுத்தல்: எம்பி, எம்எல்ஏ தேர்தல் தோல்வி எதிரொலி

திருப்போரூர், மே 29: காஞ்சிபுரம்,பெரும்புதூர் மக்களவை தேர்தல்  மற்றும் திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி  அடைந்தது. குறிப்பாக கடந்த முறை அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலிடம்,  திமுக வேட்பாளர்  செல்வம் 1 லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள்  வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இதைதொடர்ந்து கடந்த மாதம் 18ம் தேதி நடந்த தேர்தலில்  திமுக வேட்பாளர் செல்வம் 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றார். இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தின் மேற்கு மற்றும்  மத்திய மாவட்ட செயலாளர்கள் மீது தொண்டர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.  அதிலும் மத்திய மாவட்ட செயலாளராக இருக்கும் ஆறுமுகம், திருப்போரூர்  எம்எல்ஏ இடைத்தேர்தலில் நின்று தோல்வி அடைந்துள்ளார்.

மாவட்ட  செயலாளரே தோற்றால், யாரை சரியாக வேலை செய்யவில்லை என கேட்க  முடியாத நிலை உள்ளது. இதே நிலை நீடித்தால்  காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிமுகவின் நிலை அதல பாதாளத்திற்கு சென்றுவிடும் என தொண்டர்கள் கூறுகின்றனர்.முக்கிய  நிர்வாகிகள் முன்னாள் எம்பிக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், மாவட்ட  செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் வசிக்கும் பகுதியிலேயே அதிமுகவுக்கு குறைவான வாக்குகள் கிடைத்துள்ளன. இதனால், அவர்களின் உள்குத்து விபரம் வெளியே வந்து விட்டதாக அதிமுக தொண்டர்கள்  தெரிவிக்கின்றனர்.

மேலும், ஒரு ஓட்டுக்கு ₹2 ஆயிரம் என தலைமை கொடுத்ததை, முறையாக பட்டுவாடா செய்யாததால் ஆத்திரமடைந்த பலரும் திமுகவுக்கு  வாக்களித்து விட்டனர். இதனால், திமுகவின் வாக்கு பெருமளவு உயர்ந்து,  தொடமுடியாத அளவுக்கு சென்று விட்டது. தலைமை கொடுத்த பணத்தை  முறையாக கொடுக்காமல் பதுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் அதிமுக நிர்வாகிகளை மாற்ற வேண்டும் என அக்கட்சியின் தலைமைக்கு தினமும் புகார்கள் சென்ற வண்ணம் உள்ளன.

இதற்கிடையில் தற்போதுள்ள மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் மீது  புகார்கள் வந்துள்ளதாலும், தேர்தலில் தோல்வி ஏற்பட காரணமாக இருந்ததாலும்  புதிய நிர்வாகிகளை நியமிக்கவேண்டும் என வலியுறுத்தி, காஞ்சிபுரம்  மாவட்டத்தின் முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள்,  முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் என பலரும் அதிமுக தலைமையையும்,  அமைச்சர்களையும் சந்தித்து வருகின்றனர்.
 எனவே, விரைவில் காஞ்சி மாவட்ட  அதிமுகவில் பெரும் மாற்றம் வர உள்ளதாக அதிமுக தொண்டர்கள்  எதிர்பார்க்கின்றனர்.

Tags : executives ,district ,MLA ,
× RELATED மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் 16ம் தேதி நடக்கிறது