×

மின்சாரமின்றி தவித்த 10 குடும்பத்தினருக்கு மின் இணைப்பு ஆணை கலெக்டர் நேரில் வழங்கினார்

திருவண்ணாமலை, மே 29: திருவண்ணாமலை அருகே மின்சார வசதி இல்லாமல் சிரமப்பட்டு வந்த 10 குடும்பத்தினருக்கு புதிய மின் இணைப்பு பெறுவதற்கான ஆணையை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று நேரில் சென்று வழங்கினார்.திருவண்ணாமலை அடுத்த கீழ்நாத்தூர் பகுதியிலிருந்து கட்டுமான பணிகள் செய்வதற்காக சு.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் கடந்த 25 ஆண்டுகளாக சிலர் தனியார் இடத்தில் தற்காலிகமாக குடியேறி வசித்து வந்தனர். அதன்பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக அதே பகுதியில் உள்ள அண்ணாமலைபுரத்தில் குடிசை அமைத்து வசித்து வந்தனர்.திருவண்ணாமலை- திருக்கோவிலூர் சாலையில் உள்ள சு.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் உள்ள அண்ணாமலைபுரம் பகுதியில் மின்சாரம் மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வந்த 10 குடும்பத்தினர் தங்களுக்கு அடிப்படை வசதி மற்றும் மின் இணைப்பு வழங்கக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியிடம் மனு அளித்தனர்.

மனுவினை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, 10 குடும்பத்தினருக்கு உடனடியாக மின் இணைப்பு வசதி வழங்கிட நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். அதன்படி கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று அண்ணாமலைபுரத்திற்கு நேரில் சென்று, மின் இணைப்பு பெறுவதற்கான ஆணையை 10 குடும்பத்தினருக்கும் வழங்கினார். அப்போது, அங்கு வசதித்து வரும் 10 குடும்பங்களின் வீடுகளை பார்வையிட்டு, குடிசை வீடுகளுக்குள் சென்று அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்தார்.அப்போது, அங்குள்ள பெண்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததால், இரவு நேரங்களில் எங்களால் நிம்மதியாக உறங்க முடியாத நிலை உள்ளது. எங்களுக்கு பசுமை குடியிருப்பு வீடு வழங்க வேண்டும் என்று கலெக்டரின் காலில் விழுந்து கதறி அழுதனர்.

அதையடுத்து, கலெக்டர் இங்குள்ள 10 குடும்பங்களுக்கும் 2 வாரத்திற்குள் மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், குடிசை வீட்டில் வசித்து வரும் இவர்களுக்கு முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள், கழிவறை வசதியுடன் கட்டித்தரவும், போதிய அடிப்படை வசதிகள் அமைத்து தர விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.அப்போது, ஆர்டிஓ தேவி, தாசில்தார் மனோகரன், பிடிஓ பிரகாஷ் மற்றும் மின்வாரிய துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.மேலும், இங்கு வசித்து வருபவர்களின் குழந்தைகளில் 5 குழந்தைகள் பள்ளிப்படிப்பும், 2 பேர் கல்லூரிகளிலும் படித்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் அனைவரும் தினக்கூலி வேலைக்கு சென்று தங்கள் குடும்பத்தை காப்பாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




Tags : electorate commissioner ,
× RELATED அக்னி வசந்த விழாவில் அர்சுனன் தபசு...