×

ஊட்டி ரயில் நிலைய வளாகத்தில் 40 பைன் மரங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டதா?

ஊட்டி, மே 28: ஊட்டி மத்திய பேருந்து நிலையம் அருகில் ஊட்டி ரயில் நிலையம் உள்ளது. நூற்றாண்டை கடந்து செயல்பட்டு வரும் இந்த ரயில் நிலைய வளாகத்தில் சதுப்பு நிலம் உள்ளது.  மேலும் புல்வெளிகள், கோரைப்புற்கள் நிறைந்த இப்பகுதியில் 40க்கும் அதிகமான பைன் மரங்கள் உள்ளன. புல்வெளிகள் சதுப்புநிலம், குடிநீர் என அனைத்தும் இருப்பதால் இந்த இடத்தில் தவளைகள், நீர் பூச்சிகள் உள்ளிட்ட சதுப்பு நில உயிரினங்கள் அதிகளவு காணப்படுகின்றன. எப்போதும் தோடர் பழங்குடியின மக்களின் வளர்ப்பு எருமைகள் காணப்படும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சதுப்பு நில பகுதியில் ரயில்வே பயிற்சி கூடம் கட்டுவதற்கு திட்டமிட்டு, கட்டிடம் கட்ட வெட்டி எடுக்கப்பட்ட மண் சதுப்பு நிலங்களில் கொட்டி மூடப்பட்டது. தற்போது ஒரு மூலையில் சிறிய அளவிலான சதுப்பு நிலம் மட்டுமே உள்ளது.

கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக இந்த சதுப்பு நிலத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள 45 பைன் மரங்களில் 40 பச்சை பைன் மரங்கள் திடீரென பட்டுப் போனது. நன்கு வளர்ந்திருந்த மரங்கள் திடீரென காய்ந்து கருகியது உள்ளூர் மக்களிடமும், இயற்ைக ஆர்வலர்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன் கூறியதாவது: கட்டுமான பணிக்காக ஊட்டி ரயில் நிலையத்தில் உள்ள சதுப்பு நிலம் முழுக்க மண் கொட்டப்பட்டு முழுவதும் பாழ்பட்டு போனது. இந்த நிலையில் தற்போது இந்த பகுதியில் இருக்கும் 40 பச்சை மரங்களும் ஒரே சமயத்தில் பட்டுப் போய் உள்ளது. இதனால் கட்டுமான பணிக்காக திட்டமிட்டே அழிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே வனத்துறை இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை வெளியிட வேண்டும். தவறும் பட்சத்தில் போராட்டம் நடத்துவோம், என்றார். இது குறித்து ரயில்வே நிர்வாகத்திடம் கேட்ட போது, மரங்கள் பட்டுப்போனது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. அதை கவனிப்பதும் எங்கள் வேலையில்லை. வனத்துறை வேண்டுமானால் ஆய்வு செய்து கொள்ளட்டும், என தெரிவித்தனர்.

Tags : railway station ,Ooty ,
× RELATED ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட...