×

அரசு அலுவலகங்களில் தனித்தனியாக ஆன்லைன் சர்வர் அமைக்கப்படுமா? உத்தமபாளையம் மக்கள் எதிர்பார்ப்பு

உத்தமபாளையம், மே 28:  உத்தமபாளையம் நகரில் வருவாய்கோட்டாட்சியர் அலுவலகம், அரசுமருத்துவமனை, தாலுகா அலுவலகம், சார்நிலை கருவூலம், சார்பதிவாளர் அலுவலகம், அரசு பொதுசேவை மையம், தேர்தல்பிரிவு அலுவலகங்கள் என பல்வேறு அலுவலகங்கள் செயல்படுகின்றன. அனைத்து அரசுப்பணிகளுமே ஆன்லைன்மயம் ஆக்கப்பட்ட பின்பு அரசுஅலுவலர்களுக்கு கம்ப்யூட்டரில் பணிசெய்வது பற்றி பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் எல்லா வேலைகளுமே கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு பணிகள் நடக்கின்றன.

இதற்காக எல்காட் நிறுவனம் ஆன்லைன் சேவைகளை வழங்கி வருகிறது. தனியார்நிறுவனம் மூலமே எல்லா அரசு அலுவலகங்களிலும் கம்ப்யூட்டர் மூலம் பணிகள் நடக்கிறது. இதில் தினந்தோறும் பொதுமக்கள் அரசுஅலுவலகங்களுக்கு குவியத் தொடங்கி உள்ளனர். தற்போது வருமான, சாதி, இருப்பிட சான்றிதழ்கள் ஆன்லைன் மூலமாகவே தரப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தில் செயல்படும் அரசு பொதுசேவை மையத்தில் குவிகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் இங்கு செயல்படும் 10க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களுக்கு ஒரே இடத்தில்தான் சர்வர்ரூம் செயல்படுகிறது. தாலுகா அலுவலகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள இந்த அறையை பராமரிப்பதில்லை. இதனால் குப்பைகள் மண்டலமாக இது மாறிவருகிறது. தூசி அதிகளவில் சேர்வதால் காலை அலுவலகம் தொடங்கியவுடனே எந்த சர்வரும் வேலை செய்வதில்லை.

குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் ஆன்லைன் மூலமாகவே நோயாளிகளுக்கு பதிவுச்சீட்டு, மாத்திரைகள், டாக்டர் பரிந்துரை செய்யப்படுகின்றன. காலை நேரத்தில் சர்வர் பிராப்ளம் என சொல்லி நீண்ட வரிசையில் மக்கள் காக்க வைக்கப்படுகின்றனர். இதேநிலைதான் எல்லா அரசுஅலுவலகங்களிலும் உள்ளது. எனவே, உத்தமபாளையத்தில் அரசு அலுவலகங்களில் தனித்தனியாக சர்வர்ரூம் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இதுகுறித்து அரசுஅலுவலர்கள் கூறுகையில், `` அரசு அலுவலகங்களுக்கு வரக்கூடிய மக்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகிவருகிறது. எனவே அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் தனித்தனி சர்வர் அமைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றனர்.

Tags : government offices ,Uthamapalayam ,
× RELATED அரசு அலுவலர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்