×

மக்கள் கடும் பீதி 4 நாளாக மின்சாரம் கட் நெல் நாற்றுகளுடன் விவசாயிகள் முற்றுகை


சிவகங்கை, மே 28: சிவகங்கை அருகே நான்கு நாட்களாக மின்சாரம் இல்லாததால் கிராமத்தினர் நாட்டரசன்கோட்டை மின்வாரிய அலுவலகத்தை நெல் நாற்றுகளுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சிவகங்கை அருகே சூரக்குளம் புதுக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட சூரக்குளம், பொன்னாம்பட்டி, ஆணைமாவளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த 24ம் தேதி முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சூறைக்காற்று, இடி, மின்னலால் மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. நான்கு நாட்களாக மின்சாரம் இல்லாமல் கிராமத்தினர் அவதியடைந்து வந்தனர். இது குறித்து பல முறை புகார் தெரிவித்தும் மின் வாரியம் அலட்சியம் காட்டியதால் நாட்டரசன்கோட்டை மின் வாரிய அலுவலகத்தை கிராமத்தினர் நெல் நாற்றுகளுடன் முற்றுகையிட்டனர். அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களிடம் மின்வாரிய உதவி பொறியாளர் பாஸ்கரன் பேச்சுவார்த்தை நடத்தினார். மின்சாரம் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராமத்தினர் கலைந்து சென்றனர். முன்னாள் ஊராட்சித்தலைவர் மதியழகன் கூறுகையில், கடந்த வாரம் சூறைக்காற்று மழையால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புகார் கூறியும் மின்வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. நீர் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டது. குளிக்க, குடிக்க கூட நீர் கிடைக்காத நிலை உள்ளது. உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags :
× RELATED அழகப்பா பல்கலை சின்டிகேட் உறுப்பினர்கள் நியமனம்