×

காளையார்கோவிலில் நீரின்றி கருகி வரும் தென்னை மரங்கள்

காளையார்கோவில், மே 28: காளையார்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் போதிய மழையில்லாமல் தென்னை மரங்கள் கருகி வருகின்றன. காளையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஐந்தாண்டுகளாக போதிய மழையில்லாமல் விவசாயம் பாதிப்படைந்து வந்தது. கிணறு நீரை வைத்து சிறிய அளவில் விவசாயம் செய்து வந்தனர்.

தற்போது பெரும்பாலான கிணறுகள் முற்றிலும் வற்றிவிட்டன. இதனால் தோட்டங்களில் உள்ள தென்னை, மா, வாழை உள்பட பல்வேறு மரங்கள் தண்ணீரின்றி பட்டுப் போய்விட்டன. குறைந்தளவு கிடைத்துவந்த வருமானமும் பாதிப்படைந்துவிட்டதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது.

விவசாயிகள் கூறுகையில், கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேல் போதிய மழையில்லாமல் நெல் விவசாயம் முற்றிலும் பாதிப்படைந்து விட்டது. தற்போது காய்கறி விவசாயம் செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்தோம். தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியால் தண்ணீரின்றி காய்கறி விவசாயமும் கேள்விக் குறியாகிவிட்டது. இதனால் விளைநிலங்களை விற்று விடுவோம் என்று கூறினால் குவாரிகள் போடுவோர் அடிமாட்டு விலைக்கு கேட்கின்றார்கள். இந்நிலை நீடித்தால் விளைநிலத்தை கிடைத்த விலைக்கு விற்பதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்தனர்.

Tags :
× RELATED சிறந்த தொண்டு நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்