×

புத்தாநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கு.க. செய்த பெண் மீண்டும் கர்ப்பம் நிவாரணம் கேட்டு கலெக்டரிடம் மனு

திருச்சி, மே 28:  புத்தநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்பக்கட்டுப்பாடு ஆபரேசன் செய்துகொண்ட பெண் மீண்டும் கர்ப்பமானது குறித்து நிவாரணம் வழங்க கேட்டு திருச்சி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார்.  மணப்பாறை அழகக்கவுண்டம்பட்டி மானாங்குன்றத்தை சேர்ந்தவர் செல்வராஜ், தச்சு தொழிலாளி. இவரது மனைவி சிட்டம்மாள். இவர்களுக்கு  7, 5 வயதுகளில் 2 மகன்கள் உள்ளனர். 2வது மகன் பிறந்ததும் சிட்டம்மாள்  புத்தாநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்பக்கட்டுப்பாடு ஆபரேசன் செய்துகொண்டார்.

 இந்த நிலையில் தற்போது சிட்டம்மாள் கர்ப்பமாகி உள்ளார். வயிற்றில் வளருவது கர்ப்பம் தானா என்பதை அவர் ஸ்கேன் மூலம் உறுதி செய்துள்ளார். வயிற்றில் 8 மாத குழந்தை வளர்வதை உறுதி செய்த சிட்டம்மாள் திருச்சி கலெக்டர் சிவராசுவிடம் ஒரு மனு கொடுத்தார். அதில், 2 குழந்தை போதும் என கருதி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நான் 2014ம் ஆண்டு குடும்பக்கட்டுப்பாடு ஆபரேசன் செய்துகொண்டேன். இந்த நிலையில் ஏற்கனவே 2016ல் ஒருமுறை கர்ப்பமானபோது, அது வெறும் கட்டிதான் என வயிற்றை சுத்தம் செய்து அனுப்பினர். இப்போது மீண்டும் நான் கர்ப்பமாகி உள்ளேன். 3வது குழந்தையை வளர்க்கவும், பராமரிக்கவும், படிக்க வைக்கவும் எங்களுக்கு பொருளாதார வசதி இல்லை. எனவே அந்த குழந்தைக்கான அனைத்து செலவுகளுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மனு குறித்தும் விசாரிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.


Tags : collector ,