×

கிடப்பில் கிடக்கும் ரிங் ரோடு போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் திருச்செங்கோடு நகரம்

திருச்செங்கோடு, மே 28:  ரிங்ரோடு, புறவழிச்சாலை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், திருச்செங்கோடு நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். திருச்செங்கோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு, வெளிமாநிலம் மற்றும் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சேலம், சங்ககிரி, குமாரபாளையம், ஈரோடு, பரமத்தி, நாமக்கல், ராசிபுரம், ஜேடர்பாளையம், இறையமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் சாலைகள், திருச்செங்கோடு நகரில் கூடுகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஜவுளித்தொழில், லாரித்தொழில் மற்றும் ரிக் தொழில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படிக்கும்  தனியார் பள்ளி, கல்லூரிகள் அதிக அளவில் இருப்பதால், பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் திருச்செங்கோடு நகரை ஆக்கிரமித்துள்ளன.
 
கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், ராசிபுரம், ஆத்தூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும், திருச்செங்கோடு நகரை கடந்து செல்கிறது. அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை  ஏற்ப, திருச்செங்கோடு நகரில் சாலை வசதி முற்றிலுமாக இல்லை. தவிர, ஏற்கனவே உள்ள சாலைகளும் ஆக்கிரமிப்புகளால் குறுகிப்போனது. நாள்தோறும் காலை, மாலை நேரத்தில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள், மற்றும் மாலையில் வீடுகளுக்கு சரியான நேரத்துக்கு செல்ல முடியாதபடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுபோன்ற சமயங்களில் நேரத்தை இழக்கும் அரசு, தனியார் பஸ்கள்,  அதனை ஈடுகட்ட போட்டி போட்டுக்கொண்டு வேகமாக செல்வதால், விபத்துக்கள் ஏற்படுகிறது.
முகூர்த்த நாட்களில் அர்த்தநாரீஸ்வரர் மற்றும் கைலாசநாதர் கோயிலில்  திருமணங்கள்  அதிகளவு நடப்பதால்,  நாமக்கல் சாலை மற்றும் ரத வீதிகள் வாகனங்களால் நிரம்பி விடும். கோயிலில் திருவிழாக்கள் நடக்கும்போதும் நெரிசலில் சிக்கி, செல்ல வழியின்றி பல மணிநேரம் வாகனங்கள் தவிக்கும். தவிர, நகரில் அண்ணா சாலையில் இருபுறங்களிலும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. சில இடங்களில் சாலை தடுப்புக்களை எடுத்தாலே, நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை  குறையும். மேலும், மக்களின் நீண்டநாள் கோரிக்யைான நகரை சுற்றி ரிங் ரோடு அமைப்பது நிரந்தர தீர்வாக அமையும். நாமக்கல் - பள்ளிபாளையம் சாலையை இணைக்கும் புறவழிச்சாலை  திட்டம் மட்டுமே, தற்போது அரசிடம் உள்ளது. ராசிபுரம் சாலை மாதா  கோயிலில் இருந்து போக்கம்பாளையம் மீன் கிணறு வழியாக வரும் சாலை, தோக்கவாடி அருகே பள்ளிபாளையம் சாலையோடு இணைக்கப்படும். இந்த திட்டத்திற்கு ₹44  கோடி செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு  நிதி ஒதுக்காததால் திட்டம் கிடப்பில் உள்ளது. நிலம் கையகப்படுத்திவதில் சிக்கல்  உள்ளது என்றும்  கூறப்படுகிறது.  சிக்கல்களைக் களைந்து, திருச்செங்கோடு மக்களின் அன்றாட போக்குவரத்து பிரச்னைக்கு அதிகாரிகள் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்பது மக்களின் பல ஆண்டு கோரிக்கையாக உள்ளது.

Tags : Ring Road ,town ,Tiruppukku ,
× RELATED ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய நீலநிற டவுன் பேருந்துகள் இயக்கம்