×

கிலோ ₹50க்கு விற்பனை ஓட்டல்களில் தக்காளி சட்னி ‘கட்’

போச்சம்பள்ளி, மே 28:  தக்காளி விலை கிலோ ₹50க்கு விற்கப்படுவதால் ஓட்டல்களில் தக்காளி சட்னியை நிறுத்திவிட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி,  சூளகிரி, ராயக்கோட்டை, ஓசூர் ஆகிய பகுதிகளில் அதிகளவில் தக்காளி  பயிரிடப்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு மேலாக, தக்காளி விளைச்சல் அதிகமாக  இருந்ததால், உழவர் சந்தை, வாரச்சந்தை, தினசரி மார்க்கெட் மற்றும்  மண்டிகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்தது. ஒரு கிலோ தக்காளி ₹6 முதல் ₹10  வரை, 22 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி, ₹140 முதல் ₹200 வரை  விற்பனையானது. இது தக்காளி பயிரிட்டிருந்த விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை  ஏற்படுத்தியது. கடும் வறட்சியால் கிணறு மற்றும் ஆழ்துளை கிணற்றின் நீரை  கொண்டு, தக்காளி பயிரிட்ட விவசாயிகள், விலை கட்டுப்படி ஆகாமல் சந்தை  மற்றும் சாலையோரங்களில் தக்காளியை பெட்டி பெட்டியாக கொட்டிச்சென்றனர்.  தக்காளியை பறித்து சந்தை வாடகை வாகனத்தில் அனுப்பும் கூலிக்கு கூட  கட்டுப்படியாகாததால் சிலர், தக்காளி தோட்டத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு  விட்டனர்.

தற்போது, போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதியில், மழையின்றி  தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விலை கிடுகிடுவென  அதிகரித்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ₹40 முதல் ₹50 வரை விற்பனையாகிறது.  இதனால் வீடுகளில் சமையலுக்கு தக்காளியை பயன்படுத்துவதும் குறைந்து விட்டது.  அதேபோல் ஓட்டல்களில் தக்காளி சட்னியை நிறுத்தி விட்டனர். சாப்பிட வரும்  வாடிக்கையாளர்கள் தக்காளி சட்னி கேட்டால், தக்காளி விலை அதிகரித்து  விட்டதால், தக்காளி சட்னி செய்வதை நிறுத்தி விட்டோம் என கடைக்காரர்கள்  கூறுகின்றனர். மேலும், தக்காளி விலையேற்றத்தால், பல கடைகளில் பிரியாணி  விலையையும் உயர்த்தியுள்ளனர்.

Tags :
× RELATED ஓசூர் வாலிபரிடம் ₹17.98 லட்சம் மோசடி