×

பிரபல கொள்ளையர்கள் 2 பேர் கைது

திருவேங்கடம், மே 28:  திருவேங்கடம் பகுதியில் தொடர் கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 89 பவுன் நகை, ரூ.80 ஆயிரம் மீட்கப்பட்டது. திருவேங்கடம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் வீடுகள், கடைகளை உடைத்து தொடர் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க சங்கரன்கோவில் டிஎஸ்பி ராஜேந்திரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சித்ரகலா, சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த ஓராண்டுக்கும் மேலாக விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் எஸ்ஐ அய்யனார் மற்றும் போலீசார், நேற்று மதியம் திருவேங்கம் பஸ் நிலைய பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது தனியார் பள்ளி அருகே உள்ள பாலத்தில் நின்றிருந்த 2 பேரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள், முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள், சிவகாசி முருகன் காலனியை சேர்ந்த ரத்தினம் மகன் கணேசன் (36), சிவகாசி மாரநேரியை அடுத்த மணியம்பட்டியை சேர்ந்த சின்னகருப்பசாமி (36) என்பதும், இவர்கள்தான் திருவேங்கடம் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

கடந்த 7.6.18ல் குறிஞ்சாகுளம் வடக்குத்தெருவை சேர்ந்த தங்கசாமி மனைவி லட்சுமி (60) என்பவர் வீட்டில் 6 பவுன் நகைகள், புதுப்பட்டி கீழத்தெருவை சேர்ந்த துரைராஜ் மனைவி தனலட்சுமி வீட்டில் 45 பவுன், அழகாபுரி வடக்கு காலனியை சேர்ந்த இருளப்பன் மகன் முருகன் வீட்டில் 14 பவுன், உமையதலைவன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த அந்தோணிராஜ் மனைவி முத்துலட்சுமி வீட்டில் 24 பவுன், நகைகள் கொள்ளை அடித்ததையும் ஒப்புக்கொண்டனர். 29.11.2018 அன்று சின்னகாலாம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் ராஜதுரை என்பவர் திருவேங்கடம் மெயின் பஜாரில் நடத்தி வரும் பலசரக்கு கடையை உடைத்து ரூ.80 ஆயிரம் திருடியதும், நகைகள் அனைத்தையும் உருக்கி கட்டியாக வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 89 பவுன் நகை கட்டிகள், ரூ.80 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பிறகு கணேசன், சின்ன கருப்பசாமி ஆகியோர் சங்கரன்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர் கொள்ளை வழக்கில் கைதான கணேசன் மீது சாத்தூர், சிவகாசி காவல் நிலையங்களில் கொலை, திருட்டு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : burglars ,
× RELATED திருட்டுப்பொருட்களை திருப்பி தருவதாக...