×

பூந்தமல்லி அருகே நிலத்தடி நீர் திருடிய லாரிகளை சிறைபிடித்து மக்கள் மறியல்

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே முறையான அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் திருடிய டேங்கர் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பூந்தமல்லி அடுத்த பானவேடு தோட்டம் கிராம பகுதியில், தனியாருக்கு சொந்தமான நிலத்தில் 20க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. முறையான அனுமதியின்றி இந்த ஆழ்துளை கிணறுகளில் இருந்து தினந்தோறும்  நூற்றுக்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் தண்ணீர் உறிஞ்சப்பட்டு, இதை சென்னையில் உள்ள ஓட்டல்கள், வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. முன்பெல்லாம் பானவேடு தோட்டம் பகுதியில் 30 அடி ஆழத்தில் தண்ணீர் கிடைத்தது. தற்போது 100 அடி தோண்டினால்கூட தண்ணீர் வருவதில்லை. தொடர்ந்து தண்ணீர்  உறிஞ்சி லாரிகளில் எடுத்து செல்வதால் இப்பகுதியில் குடிநீர் பஞ்சம் நிலவிவருகிறது.

 இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், பூந்தமல்லி வருவாய்த் துறையில் பொதுமக்கள் பலமுறை புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று தண்ணீர் எடுக்க வந்த 2 லாரிகளை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாரிவாக்கம்-தண்டரை மெயின் ரோட்டில் சிறை பிடித்தனர். பின்னர், சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து  பாதிக்கப்பட்டது.  தகவலறிந்தும் பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் கிரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த பிரச்னை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி  உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.இந்த சம்பவத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.

Tags : grounds ,Poonamalle ,
× RELATED பிரதமர் மோடி வருகை எதிரொலி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை