×

பிரதமர் மோடி வருகை எதிரொலி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

*மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதி இல்லை

நாகர்கோவில் : பிரதமர் மோடி வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சுற்றுலா பயணிகள், மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற பாரதிய ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். பிரதமரின் வருகையையொட்டி, குமரி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

நேற்று முன் தினம் மாலை முதல் மாவட்டம் முழுவதும் விடிய விடிய வாகன சோதனை நடைபெற்றது. கன்னியாகுமரி நகருக்குள் நுழைந்த அனைத்து வாகனங்களும் பலத்த சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டன. லாட்ஜ், தங்கும் விடுதிகளில் சோதனை நடைபெற்றது. அங்கு தங்கி இருப்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அவர்களின் முகவரி சான்று உள்ளிட்டவையும் பரிசோதனை செய்தனர்.

கன்னியாகுமரி வாவத்துறை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் உள்ளவர்கள் மீன் பிடிக்க செல்ல அனுமதிக்கப்பட வில்லை. இதனால் படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. வழக்கமாக கன்னியாகுமரியில் காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கும். ஆனால் நேற்று படகு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. பிரதமர் வந்து சென்ற பின்னரே படகு போக்குவரத்து இயங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் சன்னதி தெருவில் மட்டும் கடைகள் திறந்து இருந்தன. ஆனால் சுற்றுலா பயணிகள் யாரும் லாட்ஜூகளில் இருந்து வெளியே வர வில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. கடற்கரை சாலை, காந்தி மண்டபம் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ்கள் அனைத்தும் கன்னியாகுமரி ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்பட்டன. கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இருந்து, கன்னியாகுமரி ரவுண்டனா வரை தடுப்புகள் அமைத்து மக்கள் நடமாட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. பிரதமர் வந்து செல்லும் வரை கன்னியாகுமரி வெறிச்சோடி கிடந்தது.

காவல்துறைக்கு பாராட்டு

பிரதமர் பாதுகாப்பு பணியில் எஸ்.பி. சுந்தரவதனம் தலைமையில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், மதுரை உள்பட 6 மாவட்டங்களில் இருந்து சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். டிஐஜி பிரவேஷ்குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் வந்து இருந்தனர். பிரதமர் வருகையொட்டி கடந்த இரு நாட்களாக சிறப்பான முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு, டிஐஜி பாராட்டு தெரிவித்தார்.

The post பிரதமர் மோடி வருகை எதிரொலி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,PM Modi ,Nagercoil ,Modi ,Bharatiya ,Kanyakumari Agastheeswaram Vivekananda College Grounds ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...