செம்பட்டியில் திருமண மண்டப ஸ்பீக்கர்களால் பாதிப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

செம்பட்டி, மே 23: செம்பட்டியில் திருமண மண்டபங்களில் அதிக சப்தத்துடன் வைக்கப்படும் ஸ்பீக்கர்களால் அனைத்து தரப்பினரும் பாதிப்படையும் நிலை உள்ளது. செம்பட்டியில் திருமண மண்டபம் அருகே பொதுமக்கள் மற்றும் காவலர் குடியிருப்பு, காவல்நிலையம் உள்ளன. இதேபோல் ஆத்தூர் திருமண மண்டபம் அருகில் பொதுமக்கள் குடியிருப்பு, பத்திரப்பதிவு துறை அலுவலகம், சிறு கடைகள் மற்றும் சித்தையன்கோட்டை திருமண மண்டபம் அருகில் பஸ்நிலையம், சிறுவர்கள் பள்ளிக்கூடம், தொலைபேசி அலுவலகம், வங்கி, குழந்தை பாலூட்டும் நிலையம், சிறு தொழில்கூடங்கள் உள்ளன.

இந்த திருமண மண்டபங்களில் விஷேச காலங்களில் ஒலிப்பெருக்கி வைப்பவர்கள் மேற்கண்ட எதையும் கவனத்தில் கொள்ளாமல் 1000 வாட்ஸ் ஆம்பிள்பயர் உதயுடன் ஆளுயர ஸ்பீ்க்கர் பாக்ஸ்கள் 2 அல்லது 3 வைத்து அப்பகுதியையே அலற வைக்கின்றனர். இதை யாரேனும் கேட்டால் ஒலிபெருக்கி வைப்பவர்கள் விஷேச வீடு அப்படித்தான் இருக்கும் என கேட்பவர்களை தாக்கவும் துணிகிறார்கள். இதனால் அருகாமையில் உள்ள வயோதிகர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள், வியாபாரிகள், அலுவலர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்படையும் நிலை உள்ளது.

தற்போது திருமண விஷேசங்கள் தொடர்ந்து வரவுள்ளன. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் தலையிட்டு யாருக்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் திருமண மண்டபத்தின் உட்பகுதியில் சிறியளவு ஸ்பீக்கர் பாக்ஸ்களை வைத்து பாடல்களை ஒலிபரப்பிட உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்களும், சமூகஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : campus ,hall speakers ,
× RELATED தலை முதல் கால் வரை...