மாவட்ட அளவிலான டி-20 கோவை டஸ்கர்ஸ் வெற்றி

கோவை, மே 23:கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான டி-20 போட்டியில் எஸ்.என்.ஆர் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை டஸ்கர்ஸ் அணி வெற்றி பெற்றது.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ் ஆகியவை சார்பில் மாவட்ட அளவிலான டி-20 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மாவட்டம் முழுவதுமிருந்து 42 அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டிகள் நாக் அவுட் முறையில் நடக்கிறது. நேற்று பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கோவை டஸ்கர்ஸ் அணியும் எஸ்.என்.ஆர் சன்ஸ் அணியும் மோதின.

முதலில் பேட்டிங் செய்த  எஸ்.என்.ஆர் சன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் ஆறுமுகப்பாண்டி 43 ரன்கள் எடுத்தார். கோவை டஸ்கர்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய சூர்யபிரகாஷ் 18 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்ததாக பேட்டிங் செய்த கோவை டஸ்கர்ஸ் அணி தனது அதிரடி ஆட்டதினால் 18வது ஒவரிலேயே இலக்கை விரட்டி பிடித்தது. அந்த அணி வீரர் யோகேஷ்குமார் 63 ரன்களை விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 கோவை தொழில்நுட்பகல்லூரி மைதானத்தில் நடந்த மற்றொரு போட்டியில் ஈ.ஏ.பி.சி.ஏ அணியும் ஆர்.கே.எஸ் கல்விநிலைய அணியும் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஈ.ஏ.பி.சி.ஏ அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் அபிலாஷ் 70 ரன்களை விளாசினார். பின்னர் இராண்டாவது பேட்டிங் செய்த ஆர்.கே.எஸ் கல்விநிலைய அணி 20 ஓவர்கள் முடிவில் 107 ரன்களே எடுக்கமுடிந்தது. இதன் மூலம் 54 ரன்கள் வித்தியாசத்தில் ஈ.ஏ.பி.சி.ஏ அணி வெற்றி பெற்றது.

ஸ்ரீ சக்தி கல்லூரி மைதானத்தில் நடந்த போட்டியில் ஸ்ரீசக்தி கல்லூரி அணியும் கோயம்புத்தூர் பிரண்ட்ஸ் அணியும் மோதின. இதில் 7 ரன்கள் வித்தியாசத்தில் கோயம்புத்தூர் பிரண்ட்ஸ் அணியை வீழ்த்தி ஸ்ரீசக்தி கல்லூரி அணி வெற்றி வாகை சூடியது. நேற்று நடந்த மற்ற போட்டிகளில் கோவை கினைட்ஸ்,திருப்பூர் சி.சி, சூர்யபாலா சி.சி, மிராக்கிள் சி.சி, விஜய் சி.சி அணிகள் வெற்றி பெற்றன.

Tags : Coimbatore Tuskers ,
× RELATED வங்கிகள் இணைப்பை கண்டித்து நாடாளுமன்றம் முன்பு 20ம் தேதி போராட்டம்