×

ஆரணி அருகே குடிநீர் பிரச்னை குறித்து தகவல் தெரிவிக்காத ஊராட்சி செயலாளர், டேங்க் ஆபரேட்டர் சஸ்பென்ட் பிடிஓ அதிரடி நடவடிக்கை

ஆரணி, மே 23: ஆரணி அருகே குடிநீர் பிரச்னை குறித்து தகவல் தெரிவிக்காத ஊராட்சி செயலாளர், டேங்க் ஆபரேட்டரை, பிடிஓ குப்புசாமி சஸ்பெண்ட் செய்தார். ஆரணி அடுத்த பையூர் ஊராட்சி, எத்திராஜ் நகரில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 3 மாதங்களாக சரிவர குடிநீர் வழங்கவில்லையாம். இதனால் அவதிப்பட்ட மக்கள் ஊராட்சி செயலாளர் அருளிடம் பல முறை புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஆரணி- வாழைப்பந்தல் சாலையில் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஆரணி டிஎஸ்பி செந்தில், தாலுகா சப்- இன்ஸ்பெக்டர்கள் பசலைராஜ், பாலாஜி மற்றும் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், பிடிஓ வரும் வரையில் மறியலை கைவிடமாட்டோம் எனக்கூறி டிஎஸ்பியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், டிஎஸ்பி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி குடிநீர் பிரச்னையை தீர்ப்பதாக உறுதியளித்தார். இதையேற்று மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த திட்ட இயக்குநர் ஜெயசுதா, பிடிஓ குப்புசாமி ஆகியோர் பையூர் ஊராட்சிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அங்கு நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து ஊராட்சி செயலாளர் அருள், மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காதது தெரிந்தது. இதைத்தொடர்ந்து, திட்ட இயக்குநர் ஜெயசுதா உத்தரவின்பேரில், குடிநீர் பிரச்னைகள் குறித்து தகவல் தெரிவிக்காமலும், சாலை மறியல் ஏற்பட காரணமாகவும் இருந்த ஊராட்சி செயலாளர் அருள், டேங்க் ஆபரேட்டர் வாசு ஆகிய 2 பேரையும் பிடிஓ குப்புசாமி அதிரடியாக சஸ்பென்ட் செய்து நடவடிக்கை எடுத்தார். பின்னர், பையூர் ஊராட்சியில் பழுதடைந்திருந்த மின்மோட்டார்களை உடனடியாக சீரமைத்து நேற்று குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Tags : Panchayat Secretary ,Tank Operator ,
× RELATED அரக்கோணத்தில் ரூ.1.79 கோடியில் வளர்ச்சி ...