×

அரக்கோணத்தில் ரூ.1.79 கோடியில் வளர்ச்சி பணிகள் ஆய்வு அலுவலக பணியை கண்காணிக்காத ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்

*கலெக்டர் அதிரடி உத்தரவு

அரக்கோணம் : ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஒன்றியத்தில் 42 கிராம ஊராட்சிகள் உள்ளது. இங்கு, ஒன்றிய மற்றும் மாநில அரசு சார்பில் ரூ.1.79 கோடி மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஆவாஸ் பிளஸ் திட்டத்தின் கீழ் வீடு கட்டுதல், சிமெண்ட் சாலை, தார் சாலை, குடிநீர் வசதி, பள்ளி கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுகேசாவரம், அணைக்கட்டாபுத்தூர், உறியூர், அனந்தாபுரம், நகரிக்குப்பம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி நேற்று திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், அரக்கோணம் அடுத்த உறியூர் ஊராட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் பூட்டிய நிலையில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் உள்ளது. இதனை பார்வையிட்ட கலெக்டர் வளர்மதி, ஏன் இன்னும் ஊராட்சி மன்ற அலுவலகம் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் பூட்டியுள்ளது என கேட்டார். அப்போது, பில் தொகை வழங்குவது தொடர்பாக பிரச்னை இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இப்பணிகளை முறையாக கண்காணிக்காமலும் அதுகுறித்த தகவல் தெரிவிக்காமலும் இருந்த ஊராட்சி மன்ற செயலாளரை சஸ்பெண்ட் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் லோகநாயகி, பிடிஓக்கள் ரவிச்சந்திரன், சுரேஷ் சவுந்தர்ராஜன், பொறியாளர் துரைபாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள் நவாஸ் அகமது, சாந்தி, ரேவதி உட்பட பலர் உடனிருந்தனர்.

The post அரக்கோணத்தில் ரூ.1.79 கோடியில் வளர்ச்சி பணிகள் ஆய்வு அலுவலக பணியை கண்காணிக்காத ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Panchayat secretary ,Arakkonam ,Ranipet district ,Union ,State Governments ,
× RELATED பணப் பட்டுவாடாவை ஆதாரத்துடன்...