×

புறக்கடை வான்கோழி வளர்ப்பு தொழில் செய்தால் அதிக லாபம் வேளாண். அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆலோசனை

அரியலூர், மே 21: புறக்கடை வான் கோழி வளர்ப்பு குறித்து வேளாண்மை அறிவியல் நிலைய  விஞ்ஞானிகள் ராஜேஷ்குமார், ராமசுப்ரமணியன் ஆகியோர் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்துள்ளனர். இது குறித்த அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: விவசாயத்தோடு கால்நடை வளர்ப்பையும் மேற்கொண்டால் தண்ணீர் பற்றாக்குறை விலையின்மை, ஆள் பற்றாக்குறை போன்ற  பலவித பிரச்னைகளையும் எளிதாகச் சமாளித்து வருமானம் ஈட்டி விட முடியும். அதனால் தான் பெரும்பாலான விவசாயிகள் தோட்டத்தின் ஒரு பகுதியில் மாடு வளர்ப்பு, ஆடுவளர்ப்பு, கோழிவளர்ப்பு என கால்நடை வளர்ப்பில்  ஈடுபட்டு நல்ல வருமானம் ஈட்டி வருகின்றனர்.
அந்த வகையில் புறக்கடையில் வான்கோழி வளர்ப்பு செய்து நல்ல வருமானம் ஈட்டலாம்.

புறக்கடை வளர்ப்புக்கு ஏற்ற வான்கோழியினங்கள்  அகன்ற மார்புடைய வெண்கல இனம், அகன்ற மார்புடைய வெள்ளை இனம், பெல்ட்ஸ் வில்லி சிறிய வெள்ளை இனம் மற்றும் நந்தனம் வான்கோழி 1 போன்ற இனங்கள் அதிக வெப்பத்தினை  தாங்கக்கூடியதாகவும் இறைச்சி சுத்தமாக இருப்பதாலும் வெள்ளைநிற  இறகுகளுடைய வான்கோழிகள் தமிழக வேளாண் சூழ்நிலைகளுக்கு ஏற்றவையாக கருதப்படுகின்றன. புறக்கடை வளர்ப்பு என்பது கிராமப்புறங்களில் விவசாயிகள் வீட்டுத் தோட்டங்களில் வான்கோழிகளை வளர்ப்பதை போன்றது.

வீடுகளில்  இருக்கும் நெல், அரிசி, குருணை, கம்பு, சோளம் தவிடு  போன்ற புறக்கடையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு தானியங்கள் கீரைகள், களைகள் போதுமான அளவு கிடைத்து விடும். ஆனால் புரதச்சத்து தேவை நிறைவு பெறாது.
வீட்டைச்சுற்றி 4 செண்ட் நிலம் இருந்தால் அது ஒரு ஜோடிக்கு போதுமானதாக இருக்கும். இரவு நேரத்தில் அடைத்து வைத்திட ஒரு சிறிய  அறை தேவைப்படும் அல்லது பெரிய  கூடைகள் தேவைப்படும். முட்டைகளிட ஒரு சிறிய இருட்டான இடம் தேவைப்படும். வான் கோழிகளுக்கு அம்மை, சளி ஆகிய நோய்கள்தான் அதிகமாக வரும். இவற்றை குணப்படுத்த  சீரகம், மிளகு, வெந்தயம் மஞ்சள் ஆகியவற்றை தலா 2 ஸ்பூன் அளவு எடுத்து ஒன்றாக  கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வாரம் ஒருமுறை குடிக்கும் தண்ணீரில் கலந்து கொடுத்து வந்தால் நோய் வராது. வசம்பு, பூண்டு மஞ்சள் ஆகியவற்றை தலா 100 கிராம் எடுத்து அரைத்து 5 லிட்டர் தண்ணீரில் கலந்து வான் கோழிகள் மீது மாதம் ஒரு முறை தெளித்து வந்தால் தோல் பிரச்னை வராது. வான்கோழிகள் எட்டு மாச வயது பருவத்துக்கு வந்து முட்டையிட ஆரம்பிக்கும். ஒரு வான்கோழியிலிருந்து ஆண்டுக்கு 60லிருந்து 100 முட்டைகள் கிடைக்கும். வான்கோழி முட்டைகளுக்கு  நல்ல விற்பனை வாய்ப்பு உண்டு. 30 மணி நேரத்துக்கு  ஒரு முறை முட்டையிடும். பொதுவாக அடைக்காப்பதில்லை. அதனால் இன்குபேட்டர் மூலமாக முட்டைகளை பொறிக்க வைத்து குஞ்சுகளை வளர்க்கலாம். முட்டை உற்பத்தி இரண்டாவது  வருடத்திலிருந்து குறைய ஆரம்பித்து விடும். அதில்லாமல் இரண்டாவது வருடம் கிடைக்குற முட்டைகளுக்கு குஞ்சு பொறிப்பு திறனும் குறைவாகதான் இருக்கும்.

புறக்கடையில் வளர்க்கப்படும் வான் கோழிகள் சராசரியாக ஆறு மாதத்தில் 3லிருந்து 6 கிலோ வரை எடை வந்து விடும். எனவே 1 கிலோ வான்கோழி கறி குறைந்த பட்சம் ரூ.250க்கு விற்க முடியும். புறக்கடையில் வான்கோழியின் வளர்ச்சியை அதிகரிக்க தினமும் காலையில் மக்காச்சோளம், தவிடு, அரிசி கலந்து கொடுக்கலாம். மதியம் கோ 4, கோ 5 சூர்பர் நேப்பியர், அரைக்கீரை, பாலக்கீரை, பசுந்தீவனங்கள் கொடுக்கலாம். சராசரியாக 4 கிலோ சமச்சீர் உணவு கொடுத்தால் ஒரு கிலோ எடை அதிகரிக்கும் எனவே புறக்கடை வான் கோழி வளர்த்து அதிக லாபம் பெறலாம் என்றனர்.

Tags : Scientists ,
× RELATED 8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு