×

நெல்லை, தென்காசியில் இன்று ஓட்டு எண்ணும் ஊழியர்களுக்கு பயிற்சி

நெல்லை, மே 17: நெல்லையில் 2 மையங்களில் ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு இன்று மாலை பயிற்சி அளிக்கப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை, தென்காசி ஆகிய 2 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் நெல்லை தொகுதியில் நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், ஆலங்குளம் சட்டசபை தொகுதிகளும், தென்காசி தொகுதியில் தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வில்லிபுத்தூர், ராஜபாளையம் சட்டசபை தொகுதிகளும் அடங்கும். இந்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 18ம் தேதி நடந்தது. நெல்லை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நெல்லை அரசு பொறியியல் கல்லூரியிலும், தென்காசி மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியிலும் வருகிற 23ம் தேதி நடக்கிறது.

ஒவ்வொரு தொகுதியிலும் சட்டமன்ற தொகுதி வாரியாக 14 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகிறது. ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு ஓட்டு எண்ணும் மேற்பார்வையாளர், ஒரு உதவியாளர் இருப்பார். இது தவிர ரிசர்வில் ஒரு மேற்பார்வையாளர், ஒரு உதவியாளர் இருப்பார். இவ்வாறாக ஒரு தொகுதிக்கு 400 ஊழியர்கள் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடுகின்றனர். இவர்களை கண்காணிக்க மத்திய அரசு அதிகாரிகள் மைக்ரோ அப்சர்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை தொகுதியில் ஓட்டு எண்ணும் ஊழியர்களுக்கான பயிற்சி நெல்லை கலெக்டர் அலுவலக 2ம் தளத்தில் கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ்  இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது. இதேபோல தென்காசி தொகுதியில் ஓட்டு எண்ணும் ஊழியர்களுக்கான பயிற்சி தென்காசியில் சுபம் திருமண மண்டபத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொகுதி தேர்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான முத்துராமலிங்கம் தலைமையில் நடக்கிறது. இந்த பயிற்சியின் போது ஓட்டு எண்ணும் ஊழியர்கள் எப்படி ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையும் எப்படி அளிக்க வேண்டும் என பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதற்கிடையே ஓட்டு எண்ணிக்கை தொடர்பான கூட்டத்தில் சென்னையில் பங்கேற்று திரும்பிய கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் நேற்று மாலை நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது ஓட்டு எண்ணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Tags : Nellai ,Tenkasi ,
× RELATED தொடங்கியது பயிற்சி