×

மாவட்டத்தில் 5 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட மான்கள் உயிரிழப்பு தண்ணீர், உணவு தேடி வரும்போது விபத்தில் சிக்கும் அவலம்

சிவகங்கை, மே 16: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட மான்கள் உயிரிழந்துள்ளன. தண்ணீர், உணவு தேடி வரும்போது விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அவலம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் பனங்குடி, சாத்தரசன்பட்டி, மண்மலை, சங்கரபதிகாடு, கல்லல், உடையப்பனேந்தல், வேலங்குடி, மணச்சை, கோவிலூர் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புள்ளிமான்கள் வசித்து வருகின்றன. சுமார் 20 ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதியில் வசிக்கும் மான்களின் உணவிற்கு தேவையான செடி, கொடிகள் உள்ளிட்ட உணவுகள், தண்ணீர் இல்லாத காலகட்டங்களில் இவைகளை தேடி காடுகளைவிட்டு ஊருக்குள் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டத்தில் போதிய மழையின்றி வறட்சி நிலவி வருகிறது. இதனால் தண்ணீர் மற்றும் உணவைத்தேடி காடுகளைவிட்டு மான்கள் வெளி வருகின்றன. கோடை காலங்களிலேயே இவ்வாறு அதிகமாக காடுகளைவிட்டு வெளியேறுகின்றன. இது போன்ற நேரங்களில் சாலைகளை கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டு இறப் பது, நாய்கள் கடித்து பாதிப்படைவது உள்ளிட்ட சம்பவங்கள் சில ஆண்டுகளாக அதிகமாக நடந்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால் கடந்த ஐந்து ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட மான்கள் உயிரிழந்தன. இது குறித்து வன அலுவலர் ஒருவர் கூறியதாவது: உணவு, நீர் தேவைக்காக இரவு நேரங்களில் மான்கள் காடுகளைவிட்டு வெளியேறுகின்றன. இதனால் விபத்துகள் மற்றும் நாய்களினால் கடுமையாக பாதிக்கப்படுவது, இறப்பது உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கிறது. மான்கள் காடுகளைவிட்டு வெளியேறுவதை தடுக்க ஏற்கனவே குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. கூடுதல் தொட்டிகள் கட்ட ஏற்பாடுகள் செய்து வருகிறோம். ஆண்டுதோறும் மான் இறப்பு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கூடுதல் நீர் கிடைக்கும் வகையிலும், அதை சேமிக்கும் வகையில் தொட்டிகள் கட்டவும், கண்காணிப்பு பணிகளுக்கான அலுவர்கள் நியமனம் உள்ளிட்டவைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு வேண்டும்’ என்றார்.

Tags : district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...