×

நீலகிரி மக்களவை தொகுதியில் 21ம் தேதி வாக்கு எண்ணிக்கை ஒத்திகை

ஊட்டி, மே 15: வரும் 21ம் தேதி நீலகிரி மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணும் ஒத்திகை மேற்கொள்ளப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாக கலெக்டர் தெரிவித்தார்.
 நாடு முழுவதும் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. வரும் 19ம் தேதி இறுதி கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. தமிழகத்தில் கடந்த மாதம் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடந்தது. 4 சட்ட மன்றத்திற்கான இடைத் தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இந்நிலையில், நீலகிரி தொகுதிக்குட்பட்ட ஊட்டி, குன்னூர், கூடலூர், மேட்டுப்பாளையம், அவிநாசி மற்றும் பவானிசாகர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப் பொட்டிகள் ஊட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

 மதுரை உள்ளிட்ட சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஏற்பட்ட பிரச்னையால் அனைத்து  வாக்கு எண்ணிக்கை மையங்களும் பாதுகாப்புடன் உள்ளதா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், வரும் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கான பயிற்சிகள் ஏற்கனவே அளிக்கப்பட்டது. எனினும், வரும் 21ம் தேதி நீலகிரி தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணும் ஒத்திகை நிகழ்ச்சி, வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடக்கிறது. இதற்காக அறைகள் தயார் செய்யும் பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது கம்ப்யூட்டர் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் 21ம் தேதி மாதிரி வாக்குப் பெட்டிகளை வைத்து இங்கு வாக்கு எண்ணிக்கை ஒத்திகை நடக்கவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்த வருகிறது.
 இது குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ‘நீலகிரி மக்களவை தொகுதிக்குட்பட்ட வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. வாக்குப் பெட்டிகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் யார் யார் வந்து செல்கிறார்கள் என்று கண்காணிக்கப்படுகிறது. தேர்தல் அலுவலர்கள், போலீசார், அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், எந்த தவறும் நடக்க வாய்ப்பில்லை. வரும் 21ம் தேதி வாக்கும் எண்ணும் ஒத்திகை நடக்கிறது. ஏற்கனவே, பயிற்சிகள் அளிக்கப்பட்ட போதிலும், இறுதியாக வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு நாளுக்கு முன் அதிகாரிகளுக்கு இந்த ஒத்திகை சிறந்த பயிற்சியாக அமையும்.

 இதன் மூலம் வாக்கு எண்ணிக்கையின் போது எளிதாக இருக்கும். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் 6 அறைகளில் தற்போது வாக்கு எண்ணுவதற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள் அமருவதற்கு, கம்ப்யூட்டர், வாக்குப் பெட்டிகள் வைப்பதற்கான மேஜை, இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல், வாக்கு எண்ணிக்கை மையத்தில் கம்ப்யூட்டர்கள் பொருத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார்.

Tags : Voting ,constituency ,Nilgiri ,Lok Sabha ,
× RELATED நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் கடந்த...