கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் தினக்கூலியை குறைத்ததால் தவிப்பு ஒட்டுமொத்தமாக காலில் விழுந்ததால் பரபரப்பு திடக்கழிவு மேலாண்மை திட்ட பணியாளர்கள் கலெக்டரிடம் மனு

திருவண்ணாமலை, மே 15: தினக்கூலியை குறைத்து வழங்கி பழிவாங்கும் அதிகாரியால் பாதிக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்ட சுகாதார பணியாளர்கள், திருவண்ணாமலை கலெக்டரின் காலில் விழுந்து கோரிக்கை மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில், மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 36 பெண்கள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் சுகாதார பணியாளர்களாக தினக்கூலி அடிப்படையில் வேலை செய்கின்றனர். கடந்த 2008ம் ஆண்டு மாதம் ₹750 என்ற அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்களுக்கு, கலெக்டரின் உத்தரவுபடி படிப்படியாக நாளொன்றுக்கு ₹150 வீதம் மாதம் ₹4,500 வழங்கப்பட்டது. இந்நிலையில், கீழ்பென்னாத்தூர் செயல் அலுவலரின் திடீர் நடவடிக்கையால், தினக்கூலியை குறைத்து மாதம் ₹3,850 வழங்கப்படுகிறது. மேலும், பணி செய்யும் நாட்களை முறையாக கணக்கிடாமல் கூலி குறைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, பாதிக்கப்பட்ட மகளிர் குழு பெண்கள் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்திருந்தனர். ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக அதிகாரிகள் மனு வாங்க மறுத்தனர். அதனால், கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் காத்திருந்தனர்.

அப்போது, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி அலுவலகத்துக்கு வந்தார். காரில் இருந்து கீழே இறங்கிய கலெக்டரின் காலில், திடீரென பெண்கள் அனைவரும் விழுந்தனர். இதனால், பதற்றம் அடைந்த கலெக்டர் கந்தசாமி, அவர்களை தடுத்து நிறுத்தி கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டார். அப்போது, கண்ணீருடன் மகளிர் குழுவினர் கலெக்டரிடம் தெரிவித்ததாவது: பேரூராட்சி பகுதிகளில் நூறு நாள் வேலை திட்டம் இல்லை. விவசாய வேலையும் கிடைப்பதில்லை. எனவே, குறைந்த கூலிக்கு பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சுகாதார பணியாளர்களாக வேலை செய்கிறோம். ஆனால், காலை 5.30 மணி முதல் 11.30 மணி வரையும், பகல் 1.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையும் என தினமும் வேலை செய்கிறோம். ஆனால், எங்கள் வேலை நாட்களை முறையாக செயல் அலுவலர் கணக்கிடுவதில்லை. கூலியையையும் திடீரென குறைத்துவிட்டார். இதுகுறித்து, செயல் அலுவலரிடம் நேரில் முறையிட்டோம். அப்போது, எங்களை மரியாதைக்குறைவாக ேபசி அலுவலகத்தில் இருந்து வெளியே விரட்டினார். எனவே, வேறு வழியின்றி முறையிட வந்தோம் என்றனர். மேலும், துப்புரவு பணி செய்யும் போது விபத்தில் சிக்கி ஒரு பெண் ஏற்கனவே உயிரிழந்தார். ஒருவர் படுகாயம் அடைந்தார். ஆனாலும், எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றனர். தொடர்ந்து, இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார். இதையடுத்து, மகளிர் சுய உதவிக்குழுவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags : suburbs ,
× RELATED தாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் இன்ஜின் கோளாறால் ரயில் சேவை பாதிப்பு