×

திருவாரூர் மாவட்டத்தில் 6வது நாளாக லாரிகள் ஸ்டிரைக் பொது வினியோக திட்டத்திற்கு அரிசி, நெல் கொண்டு செல்லும் பணி பாதிப்பு

திருவாரூர், மே 15: திருவாரூர் மாவட்டத்தில் நேற்றும் 6வது நாளாக  திருவாரூர், திருத்துறைபூண்டி உட்பட பல்வேறு ஊர்களில் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக பொது விநியோக திட்டத்திற்காக அரிசி மற்றும் நெல் மூட்டைகள் எடுத்து செல்லும் பணியானது பாதிக்கப்பட்டது. நுகர்பொருள் வாணிப கழகத்திலிருந்து  நவீன அரிசி ஆலைகளுக்கு நெல் மூட்டைகளை எடுத்துச் செல்லும் லாரி உரிமையாளர்களுக்கும்  அரிசி ஆலை உரிமையாளர்களுக்குமிடையே இருந்து வரும் வாடகை பிரச்னை காரணமாக லாரி உரிமையாளர்கள்  சங்கத்தினர் கடந்த 9ம் தேதி முதல் லாரிகளை இயக்காமல் இருந்து வருகின்றனர். நேற்று 6வது நாளாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி உட்பட பல்வேறு ஊர்களில் லாரிகள் இயங்காததால் திருவாரூரிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் அரவை மற்றும் பொது விநியோக திட்டத்திற்காக நெல் மற்றும் அரிசி மூட்டைகள் எடுத்து செல்லும் பணி முற்றிலுமாக  பாதிக்கப்பட்டது.


இந்நிலையில் நேற்று முன்தினம் அரிசி ஆலை உரிமையாளர்கள் தங்களிடம் இருந்து வரும் குறைந்த எண்ணிக்கையிலான லாரிகளை கொண்டு  திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து வேலூர் மாவட்டத்தின் பொது விநியோக திட்டத்திற்காக 21 வேகன்கள் மூலம் ஆயிரத்து 200 டன் அரிசி மூட்டைகளை அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். இதனை அறிந்த லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபடவே இருதரப்பினருக்குமிடையே மோதல் உண்டாகும் சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து இருதரப்பினரும் பேச்சுவார்த்தைக்காக அழைக்கப்பட்டு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ரவிச்சந்திரன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படாததன் காரணமாக வேலூர் மாவட்டத்திற்கு  அரிசி மூட்டைகளை அனுப்பும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று 21 வேகன்கள் முழுவதும் நிரப்பப்பட்டு வேலூர் மாவட்டத்திற்கு அரிசி அனுப்பப்பட்டது. இதேபோல் நேற்று முன்தினம் பொது விநியோக திட்டத்திற்காக திருத்துறைப்பூண்டியில் அரிசி ஆலை உரிமையாளர்கள் தங்களது லாரிகளில் போலீசார் உதவியுடன் அரிசியினை ஏற்றிய போது அதனை தடுக்கும் முயற்சியில் ஈடுப்பட்ட லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் 57 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை
செய்யப்பட்டனர்.  இந்நிலையில் நேற்றும்  6வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்ந்த நிலையில் லாரி உரிமையாளர் சங்கத்தினருக்கும் அரிசி ஆலை முகவர் சங்கத்தினருக்குமிடையே மோதல் ஏற்படும் நிலை இருந்து வருவதால் இரு தரப்பினரையும் அழைத்து சுமுக பேச்சு வார்த்தை நடத்துமாறு நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆனந்திடம் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர்.

Tags : Lori Strike Public Distribution Scheme for 6th Day ,Thiruvarur District ,
× RELATED முத்துப்பேட்டையில் தொடக்கப்பள்ளி சார்பில் ஐம்பெரும் விழா