×

தார் தொழிற்சாலை மீண்டும் திறப்பா?

ஒட்டன்சத்திரம், மே 14: ரெட்டியார்சத்திரம் காமாட்சிபுரத்தில் கோர்ட் உத்தரவின்படி தார் தொழிற்சாலையை இயங்க வைக்கும் முயற்சியை எதிர்த்து கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒட்டன்சத்திரம் அருகே ரெட்டியார்சத்திரம் ஊராட்சிக்குட்பட்டது காமாட்சிபுரம். இங்கு இயங்கி வரும் தார் தொழிற்சாலையின் நச்சு வாயுவினால் மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதாக கிராமமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் தொழிற்சாலையை மூட கோரி முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து தார் தொழிற்சாலை இயங்காமல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பாக தொழிற்சாலை நிர்வாகத்தினர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததாகவும், அந்த வழக்கில் ஐகோர்ட் தார் தொழிற்சாலை இயங்க அனுமதி அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதை எதிர்த்து கிராமமக்கள் நேற்று மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இவ்வூரில் 600க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். தார் தொழிற்சாலையின் நச்சு வாயுவினால் தோல் வியாதிகள் ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வருகிறோம்.

பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியதையடுத்து தொழிற்சாலை இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கோர்ட் உத்தரவை கொண்டு தொழிற்சாலை இயங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதை எதிர்த்துதான் போராட்டம் நடத்தி வருகிறோம்’ என்றனர். தகவலறிந்ததும் போலீசார் வந்து கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags :
× RELATED அரசு பஸ் டிரைவர்களுக்கு சர்க்கரை கரைசல் வழங்கல்