×

குடியிருப்பு பகுதியில் குப்பை குவியல் மாநகராட்சி வாகனத்தை சிறைபிடித்து போராட்டம்

திருப்பூர், மே 10: திருப்பூர் குடியிருப்பு பகுதியில் முறையாக குப்பைகள் அள்ளப்படாததை கண்டித்து பொதுமக்கள் மாநகராட்சி துப்புரவு வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சி 23வது வார்டு பகுதியான ரெங்கநாதபுரம் 4வது வீதியில் 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியை சுற்றியுள்ள ஜெய்நகர், குமரன் காலனி, ரெங்கநாதபுரம் 3வது வீதி உள்ளிட்ட பகுதிகள் வீடுகள் நிறைந்தவை. இப்பகுதியில் அள்ளப்படும் குப்பைகளை ரெங்கநாதபுரம் 4வது வீதியின் கடைசியில் குவிக்கப்பட்டு மினி லாரி மூலம் குப்பைகள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.  இந்த குப்பைகளை முறையாக அள்ளாமல் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இப்பகுதியில் குப்பை அள்ளப்பட்டு 3 வாரங்களுக்கு மேல் ஆகிறது. துர்நாற்றம் மற்றும் ஈக்களின் தொல்லையை தாங்க முடியாத பொதுமக்கள் குப்பைகளை  தாங்களாக அப்புறப்படுத்த முயன்றனர். தகவல் அறிந்து  தாமதமாக அப்பகுதிக்கு வந்த மாநகராட்சி துப்புரவு வாகனத்தை அப்பகுதி பொதுமக்கள் நேற்று சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: பல்வேறு பகுதியில் இருந்து இப்பகுதியில் டன் கணக்கில் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர். இங்கிருந்து குப்பைகள் உடனுக்குடன் அப்புறப்படுத்துவதில்லை. இப்பகுதியை குப்பை கிடங்கு போல் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், இப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. ஈக்கள் மற்றும் கொசு தொல்லையால் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் நிம்மதியாக உணவு அருந்தவோ தூங்கவோ முடிவதில்லை. குழந்தைகளை வீடுகளில் வைத்திருப்போர் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர் என்றனர்.  சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் வடக்கு போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், மாநகராட்சி அலுவலர்களிடம் பேசி குப்பையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். அதன்பின்னர், மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் குப்பைகள் அள்ளி சுத்தப்படுத்தினர். இந்த போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : area ,corporation ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...