×

பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு குறைந்த விலையில் டீசல் கிடைக்க ஏற்பாடு

திருப்பூர், மே 10: திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் உற்பத்தி செலவுகளை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் எரிபொருள் செலவை குறைக்க  ஏற்றுமதியாளர் சங்கத்தின் சார்பில் டீசல் பங்க் அமைக்க இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.  திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பின்னலாடை சார்ந்த  உள்நாட்டு, ஏற்றுமதி ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், ஜாப் ஒர்க் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. உலக பின்னலாடை சந்தையில் ஆடை வர்த்தகம் சரிந்து வரும் நிலையில் போட்டி நாடுகளின் விலையை சார்ந்து இந்திய ஆடைகளுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு  பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு பல ஆண்டுகளாக வழங்கி வந்த பல்வேறு சலுகைகள் குறைக்கப்பட்டுள்ளதால் ஏற்றுமதி வர்த்தகம் ஸ்தம்பித்துள்ளது.

 திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர் சங்கத்தின் சார்பில் கடந்த ஆண்டு கூட்டு கொள்முதல் குழு துவங்கப்பட்டு, இடைத்தரகர்கள் இன்றி உற்பத்தி நிறுவனங்களிடம் நேரடி வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்தி  பொருட்களை வாங்கி வருகின்றனர். அடுத்த கட்டமாக பின்னலாடை நிறுவனங்களுக்கு சொந்தமாக பஸ்கள், லாரிகள், ஜெனரேட்டர், கார்கள், இரு சக்கர வாகனங்கள் ஏராளமான வாகனங்கள் இயங்கி வருகிறது. டீசல், பெட்ரோல், லூப்ரிகன்ட் ஆயில் ஆகியவற்றிக்காக மாதந்தோறும் பல லட்ச ரூபாய்களை செலவிடுகின்றனர்.  இது குறித்த ஆலோசனை கூட்டம், ஏற்றுமதியாளர் சங்க அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கமிட்டி தலைவர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். சங்கத்தின் பொதுச்செயலாளர் விஜயகுமார், உறுப்பினர் சேர்க்கை கமிட்டி தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன சேலம் கோட்ட வர்த்தக முதன்மை மேலாளர் ரங்கராஜனுடன்  கூட்டு கொள்முதல் குழு பொறுப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தனியார் பயன்பாட்டிற்கான நுகர்வோர்  டீசல் பம்ப் அமைக்க இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் அவர்களே பம்ப் அமைத்துக்கொடுக்க முன்வந்துள்ளனர். இதற்கான ஆயத்தபணிகள் விரைவில் துவங்க உள்ளனர். திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர் சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ள பின்னலாடை நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களுக்கு குறைந்த விலையில் எரிபொருட்கள் கிடைக்க உள்ளதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Tags : Knitwear exporters ,
× RELATED சுற்றுலா பயணிகள் வருகை குறைய வாய்ப்பு