×

12 ஆண்டுகளாக வழிப்பறி செய்த எல்லை பாதுகாப்பு படை எஸ்.ஐ கைது

ஆவடி: ஆவடி, பட்டாபிராம் சார்லஸ் நகர், வஉசி தெருவை சேர்ந்தவர் ராணி (66). ஆவடி ராணுவ தொழிற்சாலையில் ஓய்வு பெற்ற அதிகாரி. கடந்த மாதம் 27ம் தேதி ராணி வீட்டு வாசல் முன்பு நின்றிருந்தபோது பைக்கில் ஹெல்மட் அணிந்து வந்த ஆசாமி திடீரென ராணி கழுத்தில் கிடந்த 5 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பி சென்றார். புகாரின்பேரில் பட்டாபிராம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி ஆசாமியை தேடி வந்தனர். போலீசார் விசாரித்தபோது, செயின் பறித்தவர் அண்ணாநகர் மேற்கு, சாந்தோம் காலனி, 1வது தெருவை சேர்ந்த ஜார்ஜ் என்ற செல்வராஜ் (57) என்பதும், ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை  எஸ்.ஐ என்பதும் தெரிந்தது. தலைமறைவாக இருந்த அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

ஜார்ஜ் கொடுத்த தகவலின்பேரில் 5 சவரன் செயினை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை திருவள்ளூர் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். போலீஸ் விசாரணையில் தெரிந்ததாவது:
ஜார்ஜ் கடந்த 2001ம் ஆண்டு எல்லை பாதுகாப்பு படையில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு 2007ம் ஆண்டு முதல் தொடர்ந்து பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது அம்பத்தூர், நீலாங்கரை, மடிப்பாக்கம், ராயலா நகர், ஆதம்பாக்கம், புழல், மாங்காடு உள்ளிட்ட இடங்களில் 10க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. போதிய வருமானம் இல்லாததால் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரை போலீசார் 2016க்கு பிறகு நடந்த எந்த குற்ற சம்பவங்களிலும் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Border Security Force Sie ,
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...