×

அருப்புக்கோட்டை அண்ணாசிலை பகுதியில் கழிவறை வசதியின்றி மக்கள் அவதி

அருப்புக்கோட்டை, மே 9: அருப்புக்கோட்டை அண்ணாசிலை பகுதியில், கழிப்பறை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக கடைகளில் வேலை செய்யும் பெண்கள், இயற்கை உபாதைகளை கழிக்க மிகவும் சிரமப்படுகின்றனர். அருப்புக்கோட்டை அண்ணா சிலை பகுதியில் காய்கறி, பலசரக்கு, ஜவுளிக்கடை என 100க்கு மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளில் பொருட்கள் வாங்குவதற்காக, சுற்றுப்புற கிராம மக்கள், அருப்புக்கோட்டை நகர் பொதுமக்கள் என தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். வணிக நிறுவனங்களுக்கு வரும் ஆண்கள், பெண்கள் தங்களது இயற்கை உபாதைகளை கழிக்க, இப்பகுதியில் கழிப்பறை வசதியில்லை.

ஆண்களுக்கு மட்டும் அண்ணாசிலை அருகே ஒரு சிறிய சிறுநீர் கழிப்பறை உள்ளது. இதில், 3 பேருக்கு மேல் செல்ல முடியாது. மேலும், தண்ணீர் வசதியில்லை. பராமரிப்பின்றி துர்நாற்றம் வீசுகிறது. ஆனால், பெண்கள், தங்கள் இயற்கை உபாதைகளை கழிக்க, பழைய பஸ்நிலையத்திற்கோ அல்லது அகமுடையார் மஹால் பகுதிக்கு செல்ல வேண்டி உள்ளது. குறிப்பாக கடைகளில் பணிபுரியும் பெண்கள் அவதிப்படுகின்றனர். நகரின் மையப்பகுதியில் பொதுமக்கள் அதிகமாக கூடும் அண்ணாசிலை பகுதியில் கழிப்பறை வசதி இல்லாமல் இருப்பதால் மிகவும் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில், அண்ணா சிலை பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, தனியார் கடைகளை வைத்துள்ளனர். அவைகளை அகற்றிவிட்டு, ஏற்கனவே இருக்கும் சிறுநீர் கழிப்பிடத்தையும் இடித்துவிட்டு ஆண்களுக்கும், பெண்களுக்கும் நவீன சுகாதார வளாகத்தை கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்

Tags : Aruppukkottai Annasilai ,area ,toilet people ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி