×

வேதாரண்யத்தில் கஜா புயலின் கோர தாண்டவத்தால் முடங்கிய கயிறு தொழிற்சாலை சிறுதொழில் கடனை ரத்து செய்து நிவாரணம் வழங்க கோரிக்கை

வேதாரண்யம், மே 9: வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம், குரவப்புலம் ஆகிய பகுதிகளில் தென்னை மட்டையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் கயிறு தொழிற்சாலைகள் கஜா புயலின் தாக்கத்திற்கு பிறகு கடந்த 6 மாத காலமாக முடங்கி போய் உள்ளன.  நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் பெரியகுத்தகை, வௌ்ளப்பள்ளம், நாலுவேதபதி, செம்போடை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தென்னை சாகுபடி அதிகளவில் நடைபெற்றது. இதனால் தென்னை  மட்டையிலிருந்து நார் எடுக்கும் தொழிற்சாலை புஷ்பவனத்தில் துவங்கப்பட்டது.

தென்னை மட்டையை ஊறவைத்து அதை இயந்திரத்தில் பொடியாக்கி, பிறகு கயிறு திரிப்பதற்கு ஏற்ற வகையில் நாராக தயார் செய்யப்படுகிறது. இதனை அதிக அளவில் வேதாரண்யத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிக்கும் மற்றும் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். மேலும் இந்த கயிறு தொழிற்சாலையில் கயிறு உற்பத்தியில் கிடைக்கும் தென்னங் கழிவுகளை  உரத்துக்காகவும், நீர் மேலாண்மைக்காகவும் வாங்கி செல்கின்றனர்

இந்த தொழிற்சாலைகள் லாபகரமாக இயங்கி வந்த வேளையில், கஜா புயல் தாக்கத்தினால் தொழிற்சாலையின் மேற்கூரை மற்றும் கயிறு தயாரிக்கும் உபகரணங்கள் முற்றிலும் சேதமடைந்தன. இதனால் தொழிற்சாலைகளை இயக்க முடியாமல் தொழிலாளர்கள் முடங்கிபோயின. இதனால் உற்பத்தியாளர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. தொழிற்சாலை முடங்கியதால் அரசிடமிருந்து வாங்கிய கடனை கட்ட முடியாமலும், கயிறு தொழிற்சாலை மற்றும் சிறுதொழிற்சாலை வைத்திருப்போரும் முடங்கி போயினர்.

இதனால் இந்த தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் உள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தொழிற்சாலையை இயக்கி தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவதற்கு கஜா புயலால் பாதிக்கப்பட்ட தொழிற் கூடங்களின் கடன்களை அரசு ரத்து செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தென்னை நார் கயிறு தொழிற்சாலை உரிமையாளர் இளம்பரிதி கூறியதாவது, இப்பகுதியில் விளையும் தேங்காயிலிருந்து எடுக்கப்படும் மட்டையை கொண்டு கயிறு தொழிற்சாலை துவங்கி நூற்றுக்கணக்கானோர் வேலை வாய்ப்பை பெற்று வந்தனர். தமிழ்நாடு சிறுதொழில் முதலீட்டு கழகத்திலிருந்து கடன் பெற்று தொழிற்சாலையை துவங்கினோம். கடந்த ஆண்டு டிசம்பரில் வீசிய கஜா புயலின் தாக்கத்தால் பல்வேறு சிறுதொழில் கூடங்கள் முற்றிலும் சேதமடைந்தன. இதனால் வாங்கிய கடனை கட்ட முடியாமலும் தொழிற்சாலையை இயக்க முடியாமலும் முடங்கி போய் உள்ளோம். எனவே சிறுதொழில்கள் அழிந்து விடாமல் பாதுகாக்க அரசு கடனை தள்ளுபடி செய்து பாதித்த தொழிற்சாலைக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

Tags : factory ,kaja storm ,Vedaranyam ,
× RELATED சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில்...