×

காரைக்காலில் பருவ மழைக்கால டெங்கு பரவல் தடுப்பு முன்னேற்பாடு நடவடிக்கை ஆய்வுக்கூட்டம்: டெங்குவை கட்டுப்படுத்த மக்களுடன்இணைந்து செயல்பட ஆலோசனை

காரைக்கால், செப்.26: வருகிற பருவ மழை காலத்தில் டெங்கு நோய் வெகுவாக உயர வாய்ப்புள்ளதால் டெங்கு பரவல் தடுப்பு முன்னேற்பாடு நடவடிக்கை குறித்த கூட்டம், சுகாதார ஆய்வாளர்கள், மற்றும் சுகாதார உதவியாளர்களுக்கு துணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நலவழிதுறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் தலைமை வகித்து பேசியதாவது: டெங்கு நோய் அறிகுறிகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். நோய் அறிகுறி இருப்பின் உடனடியாக அருகில் உள்ள அரசு சுகாதார நிலையத்திலோ அல்லது பொதுமருத்துவமனையையோ அணுகலாம். அதன் மூலம் நோய் தாக்கத்தை குறைத்தும், உயிர் இழப்பு ஏற்படாமல் தடுக்கும் வண்ணம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

டெங்கு நோய் பரப்பும் ஏடிஸ் கொசு இனப்பெருக்கம் செய்யும் இடங்களை கண்டறிதல், காலி மனைகள், பழைய பொருள்கள் சேகரிக்கும் கடைகள், பள்ளி மற்றும் பொது நிறுவன வளாகங்கள், தொழில் மற்றும் உற்பத்தி தொழிற்சாலை ஆகிய இடங்களில் டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அதனை அகற்ற வழி செய்தல் வேண்டும். நோய் அதிகமாக உள்ள இடங்களில் புகை மருந்து தெளித்தல், நோய் அதிகமாக பரவும் வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து அந்த இடங்களில் காரைக்கால் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து, நாட்டு நல பணி திட்டம், ஊரக வளர்ச்சி திட்டம் ஆகிய சார்பு துறைகளுடன் சுகாதாரத் துறை ஒருங்கிணைந்து பல கட்டங்களில் டெங்கு நோய் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பேசினார்.

கூட்டத்தில், வருகிற மழைக்காலங்களில் வயிற்றுப்போக்கு அதிகமாக வர வாய்ப்புள்ளதால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து மூலமாக மேல்நிலைத் தொட்டி மற்றும் கீழ்நிலை தொட்டிகளையும் முறையாக சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், டெங்கு நோயை துரிதமாக கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மக்களோடு இணைந்து செயல்பட ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்ட ஏற்பாடுகளை துணை இயக்குனர் அலுவலக தொழில்நுட்ப உதவியாளர்கள் நந்தகுமார், பழனிராஜ் ஆகியோர் செய்திருந்தனர். கூட்டத்தை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் தேனாம்பிகை ஒருங்கிணைத்து வழி நடத்தினார். நிகழ்ச்சி நிறைவில் சுகாதார ஆய்வாளர் ஆண்ட்ரூஸ் நன்றி கூறினார்.

The post காரைக்காலில் பருவ மழைக்கால டெங்கு பரவல் தடுப்பு முன்னேற்பாடு நடவடிக்கை ஆய்வுக்கூட்டம்: டெங்குவை கட்டுப்படுத்த மக்களுடன்இணைந்து செயல்பட ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Monsoon Dengue ,Karaikal ,Department of Health Assistant ,Monsoon Rainy Dengue ,Action ,
× RELATED நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்ட மீனவ கிராமங்களின் கூட்டம்