×

சுத்திகரிப்பு நிலையம் கட்ட மறுப்பு குளங்களில் வீணாகிய பல கோடி ரூபாய்

கோவை, மே.9:கோவையில் 9 குளங்களில் சுத்திகரிப்பு நிலையம் கட்டாமல் ஆகாய தாமரைகளை அகற்றும் பணியில் பல ேகாடி ரூபாய் வீணாகி விட்டதாக புகார் எழுந்துள்ளது. கோவை நொய்யல் ஆற்றின் நீராதாரத்தில் 28 குளங்கள், 20 தடுப்பணைகள் உள்ளது. நகரில் பொதுப்பணித்துறையின் கட்டுபாட்டில் உள்ள நரசாம்பதி, செல்வாம்பதி உட்பட 9 குளங்கள் பராமரிப்பிற்காக மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 2007ம் ஆண்டில் இருந்து மாநகராட்சி நிர்வாகம் நரசாம்பதி, செல்வாம்பதி, கிருஷ்ணாம்பதி, முத்தண்ணகுளம், செல்வசிந்தாமணி, உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், குறிச்சி குளம், சிங்காநல்லூர் குளம் போன்றவற்றை பராமரித்து வருகிறது. கடந்த 12 ஆண்டுகளில் இந்த குளங்களில் பல முறை ஆகாய தாமரை அகற்றப்பட்டது. கடந்த 4 ஆண்டில் முத்தண்ண குளம், குறிச்சி குளம், நரசாம்பதி, செல்வாம்பதி, கிருஷ்ணாம்பதி குளத்தில் ஆகாய தாமரை அகற்ற சுமார் 5 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. உக்கடம் பெரிய குளம், வாலாங்குளத்தில் 4 முறை ஆகாய தாமரை அகற்றப்பட்டது. இதற்காக 3 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.

ஆகாய தாமரைகள் அகற்றிய குளங்களில் சில மாதங்களில் மீண்டும் ஆகாய தாமரைகள் படர்ந்து விட்டது.ஆனால் ஆண்டுதோறும் குளம் சுத்தம் செய்யும் பணி என்ற வகையில் டெண்டர் விட்டு குளங்களை அறைகுறையாக சுத்தம் செய்து பல லட்ச ரூபாய் சுருட்டுவது வாடிக்கையாக நடக்கிறது.  நகரில் உள்ள குளங்களில் சாக்கடை நீர் மட்டுமே அதிகளவு தேங்கியுள்ளது. துர்நாற்றத்துடன் கருப்பு நிறமாக காட்சி தரும் இந்த குளத்தில் ஆகாய தாமரை முழுமையாக அகற்ற முடியாது என மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரியும். குளத்திற்கு வரும் நீரை சுத்திகரிப்பு நிலையம் கட்டி சுத்திகரித்து விட்டால் மட்டுமே ஆகாய தாமரைகளை தடுக்க முடியும். ஆனால் இதுவரை எந்த குளத்திலும் சுத்திகரிப்பு நிலையம் கட்டவில்லை. அப்படி கட்டி நீரை சுத்திகரித்தால் ஆகாய தாமரைகளை அகற்றும் நிலை வந்திருக்காது. ஆனால் மாநகராட்சியினர் இதற்காக எந்த திட்டமும் தயாரிக்கவில்லை. மாநகராட்சி நிர்வாகத்தினர் ஒப்பந்த நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து ஆகாய தாமரைகளை அகற்றும் திட்டத்தில் முறைகேடு செய்வதாக சுற்றுச்சூழல் அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளது. பொதுப்பணித்துறையினர் கூறுகையில்,  ‘‘ நகரில் 8 குளங்களை நகர்ப்புர புனரமைப்பு திட்டத்தில் சீரமைப்பதாக ஒப்பந்தம் போட்டு மாநகராட்சி நிர்வாகம் பெற்றது. ஆனால் எந்த சீரமைப்பு பணியும் நடக்கவில்லை. சாக்கடை கழிவுகளை தேக்கி குளங்களை நீராதார பட்டியலில் இருந்து நீக்கும் வகையில் மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. ஆகாய தாமரைகளை அகற்ற செலவிட்ட தொகை இருந்திருந்தால் அனைத்து குளங்களையும் சீரமைத்திருக்க முடியும், ’’ என்றனர்.

Tags : refineries ,
× RELATED சுத்திகரிப்பு நிலையங்களுக்கு புது கட்டுப்பாடுகள் விதிப்பு