×

அரிமளம் அருகே மின்சாரம் தட்டுப்பாட்டால் நர்சரி தொழில் பாதிக்கும் அபாயம்

திருமயம், மே 8: அரிமளம் அருகே மின்சாரம் தட்டுப்பாட்டால் நர்சரி தொழில் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வேலை இழக்கும் நிலை உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், கல்லுக்குடியிறுப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 450க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நர்சரி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் 40 ஆண்டுகளுக்கு முன்னர் கூலித்தொழிலோடு, கத்தரி, மிளகாய், வெண்டை உள்ளிட்ட காய்கறி கன்றுகள் வளர்க்கும் தொழில் செய்து வந்தனர். இந்நிலையில் அரிமளம் பகுதியில் உள்ள நுற்றுக்கணக்கான ஏக்கரில் இருந்த பல மர காடுகள் அழிக்கப்பட்டதால் புதிய மர கன்றுகள் நட அரசுக்கு மரக்கன்றுகள் தேவைப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு அரிமளம் பகுதி மக்கள் நர்சரி தொழில் செய்ய ஆரம்பித்தனர்.

இதில் குடும்ப நடத்த போதுமான வருவாய் இருந்ததால் இதனையே பரம்பரை தொழிலாக செய்து வருகின்றனர். காலப்போக்கில் பூச்செடிகள், அலகு தாவரங்களுக்கு அதிக கிராக்கி இருந்ததால் நர்சரி தொழிலயே அப்பகுதி மக்கள் முழுநேர தொழிலாக செய்கின்றனர். இதனிடையே நர்சரி தொழிலுக்கு முக்கியமாக நன்கு காற்றோட்டமான இடம், பிளாஸ்டிக் கவர், தரமான மண், நீர், உரம் முக்கிய தேவையாக உள்ளது. இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் அடிக்கடி மழை பெய்ததால் நர்சாp பகுதியில் சிறிய குட்டை அமைத்து மழை நீரை சேகரித்து கன்றுகள் வளர்க்க குட்டையில் தேங்கிய நீரை பயன்படுத்தி வந்தனர். இதனால் மின்சாரம் தேவைகள் குறைந்தததோடு மின்கட்டணமும் குறைவாக இருந்தது. அதே சமயம் அப்போது மரக்கன்றுகளின் தேவைகள் குறைவாக இருந்தது. மேலும் தரமான மண், உரம் எடுப்பதில் பிரச்னை இல்லை. கடந்த சில ஆண்டுகளாக பருவ நிலை மாற்றத்தால் மழை சரிவர பெய்யாததால் மழை நீர் சேகரிக்க முடியாமல் நிலத்தடி நீர், மின்சாரத்தை நம்பியே நர்சரி தொழில் நடத்த வேண்டி உள்ளது.  இதனால் நர்சரி தொழிலில் போதுமான வருமானமின்றி பணியாளர்களுக்கு கூலி கூட கொடுக்க முடியாமல் நர்சரி நடத்துபவர்கள் திண்டாடி வருகின்றனர். தற்போது அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் பணம் கொடுத்தாலும் மண் எடுப்பதில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டி உள்ளது. எனவே நாடு முழுவதும் மர வளர்க்க மூல காரணமாக இருக்கும் அரிமளம், கல்லுக்குடியிறுப்பு பகுதி நர்சரி தொழிலாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மின்சார தட்டுப்பாடு:

கல்லுக்குடியிறுப்பு கிராமத்தில் மட்டும் நர்சரி  தொழில் செய்வதற்காக 250 ஆழ்துளை கிணறுகள் நீர்மூழ்கி மின்மோட்டார்  வசதியுடன் உள்ளன. இந்நிலையில் இந்த அனைத்து மின் மோட்டார்களும் ஒரு  டிரான்ஸ்பரின் கீழ் இயங்குகிறது. இதனால் அனைத்து நீர்மூழ்கி மோட்டார்களும்  ஒரே நேரத்தில் இயங்கும் போது போதுமான மின்சாரமின்றி குறைவழுத்த  மின்சாரத்தால் மோட்டர்கள் பழுதாவதோடு கிணற்றில் இருந்து குறைந்த அளவு நீரே  வெளியேற்றப்படுகிறது. இதனால் கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்ச நீண்ட நேரம்  மோட்டார் ஓட வேண்டி உள்ளதால் மின்கட்டணம் சாராசரியாக ரூ.5 ஆயிரத்திலிருந்து  8 ஆயிரம் வரை உயருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  கல்லுக்குடியிறுப்பு நர்சரி தொழிலார்களின் நலன் கருதி கூடுதல்  டிரான்ஸ்பார்மர் நிறுவ வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

வறட்சியால் கருகும் செடிகள்

இது பற்றி கல்லுக்குடியிருப்பு நர்சரி தொழிலாளி சேகர்(40) கூறிதாவது: ஒவ்வொரு மர கன்றுகளையும் குழந்தையை போல் பாதுகாத்து வருகிறோம். 24 மணி நேரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக மர கன்றுகளுக்கு நீர் விட வேண்டும் இல்லையேல் மரக்கன்று கருகிவிடும். இங்கிருந்து ஆந்திரா, கேரளா, கர்நாடகா, அஸ்ஸாம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் மரக்கன்று அனுப்புகிறோம். தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுவதால் மரக்கன்று வியாபாரம் மந்தமாக உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மரக் கன்றுகள் பராமரிக்க முடியாமல் கருகியதால் குப்பையில் வீணாக கொட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றார்.

Tags : Arimala ,nursing labor ,
× RELATED முதலமைச்சரின் சிறப்பு தூர்வாரும்...