×

ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் இல்லை பில்லாங்குளத்தில் காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டம் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

பெரம்பலூர், மே 8: ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் செய்யாததால் பி்ல்லாங்குளம் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா கை.களத்தூர் அருகே பில்லாங்குளம் பகுதி உள்ளது. இந்த ஊராட்சி செயலாளராக முருகேசன் உள்ளார். இந்த பகுதிக்கு குடிநீர் வந்து கொண்டிருந்த குடிநீர் குழாய் காரியானூர்- பில்லாங்குளம் இடையே பாலம் கட்டுமான பணிக்காக தோண்டியபோது உடைபட்டதால் 10 நாட்களாக தண்ணீர் வரத்து தடைபட்டுள்ளது. அதோடு பில்லாங்குளம் ஊராட்சிக்கென காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் குழாய்கள் பதித்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்தும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் விநியோகத்துக்கான சோதனை ஓட்டம் கூட நடத்தவில்லை.

குறிப்பாக பில்லாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கிளை கிராமமான அய்யனார் பாளையத்துக்கு காவிரி குடிநீர் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் தாய் கிராமமான பில்லாங்குளத்துக்கு காவிரி குடிநீர் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையில் தான் உள்ளது. அதோடு ஊராட்சியில் பழுதான போர்வெல் பைப்புகளும் சரி செய்யப்படாமல் உள்ளது. கிணறுகளில் இருந்து குடிநீர் விநியோகித்து ஒரு மாதமாகிறது. முறையாக குறைந்தபட்ச அளவாவது குடிநீர் விநியோகிக்க வேண்டுமென பொதுமக்கள் அடிக்கடி வலியுறுத்தியும் ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் பில்லாங்குளம் விஏஓ அலுவலகம் அருகே கிருஷ்ணாபுரம்- கூகையூர் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தை நேற்று நடத்தினர்.  இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) இளங்கோவன் வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடைந்த குழாய் சரி செய்யப்படும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பேசி காவிரி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும். வாகனங்களில் குடிநீர் விநியோகிக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதன்பேரில் காலை 9.30 மணிக்கு தொடங்கிய மறியல் போராட்டத்தை காலை 11.30 மணிக்கு பொதுமக்கள் கைவிட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags :
× RELATED பாடாலூர் செல்போன் கடையில் திருட்டு