×

சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற அரிய வகை சங்குகள் பறிமுதல் : 6 ேபரிடம் விசாரணை

மீனம்பாக்கம், மே 8: சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து வௌிநாட்டிற்கு அரிய வகை பொருட்கள் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்கத் துறை பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சென்னையை சேர்ந்த ஜமீல் உசேன் (46), யூனிஸ் (37), நூர் முகமது (32), அலாவுதீன் (38), நாகூர் மீரான் (32) உட்பட 6 பேர் குழுவாக சிங்கப்பூருக்கு செல்ல வந்தனர். இவர்கள் மீது சந்ேதகமடைந்த அதிகாரிகள் 6 பேரையும் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

பின்னர் அவர்களது உடமைகளை ேசாதனை செய்தபோது, அதில் அரிய வகையான பச்சை நிற சங்குகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். மேலும் அந்தமான் - நிகோபார் தீவுகளில் மட்டுமே இந்த அரிய வகையான பச்சை நிற சங்குகள் கிடைக்கும். இந்த பச்சை நிற சங்கு ஒன்று சிங்கப்பூரில் 50 டாலர் வரை விற்பனையாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து 6 பேரிடம் இருந்து 180 பச்சை நிற சங்குகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சுங்கத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

41 லட்சம் தங்கம் சிக்கியது

துபாயில் இருந்து விமானம் ஒன்று சென்னை வந்தது. அதில் வந்த ஆந்திர மாநிலம் கடப்பாவை ேசர்ந்த ரஜினி (45), சரஸ்வதி (35) ஆகியோரின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் 32 லட்சத்து 52 ஆயிரம் மதிப்புள்ள 997 கிராம் தங்கம் இருப்பது தெரிந்தது. அவற்றை கைப்பற்றினர்.  அதேபோல், கொழும்புவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த திண்டுக்கலை சேர்ந்த லட்சுமி (53) என்பவரை சோதனை செய்ததில், உள்ளாடைக்குள் 6 லட்சத்து 72 ஆயிரம் மதிப்புள்ள 206 கிராம் தங்கம் மறைத்து வைத்திருப்பது தெரிந்தது. அவற்றை கைப்பற்றினர். கொழும்புவில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தை ேசர்ந்த பாத்திமா (45) என்பவரை சோதனை செய்ததில், அவர் மறைத்து வைத்திருந்த 2 லட்சத்து 42 ஆயிரம் மதிப்புள்ள 74 கிராம் தங்கத்தை கைப்பற்றினர். இதுதொடர்பாக 4 பெண்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Investigation ,
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...