×

விண்ணப்பங்கள் விநியோகம் ஆதரவற்றோர் காப்பகத்தில் பாலியல் வன்கொடுமை கலெக்டரிடம் விசிக புகார்

தேனி, மே 7: தேனி மக்களவை தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் தமிழ்வாணன் தலைமையில் அக்கட்சியினர் நேற்று தேனி கலெக்டர் பல்லவிபல்தேவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், பெரியகுளம் தாலூகா கெங்குவார்பட்டியில் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் செயல்படும் ஆதரவற்றோர் காப்பகத்தில் சுமார் 300 மாணவியர் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்நிறுவனத்தின் மீது பாலியல் புகார்கள் வருகின்றன. கடந்த மாதம் மாரியப்பன் என்பவர் ஒரு சிறுமியிடம் தகாத உறவு கொண்டதாக போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு வருசநாடு பகுதியை சேர்ந்த மாணவி கவுசல்யா என்பவர் மர்மமான முறையில் இறந்தார். அவரது மர்ம மரணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுசல்யாவின் தாய் பூங்கொடி பலமுறை சட்டப்போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, இக்காப்பகத்தில் உள்ள மாணவியர்களை வேறு அரசு காப்பகத்திற்கு மாறுதல் செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்தனர். இதுகுறித்து கலெக்டர் பல்லவிபல்தேவிடம் கேட்டபோது, `` இரு தினங்களுக்கு முன்பு காப்பகம் மீது பொய்புகார் கூறுவதாக கூறி சிலர் வந்து புகார் அளித்தனர். இன்று காப்பகத்தில் தவறு நடப்பதாக கூறி ஒருதரப்பினர் புகார் அளித்துள்ளனர். எனவே, இதுகுறித்து நேரில் விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.


Tags : Sexual Assault Collector ,
× RELATED தேனி அருகே வேன் கவிழ்ந்து சென்ட்ரிங் தொழிலாளி பலி: 2 பேர் படுகாயம்