×

அடிப்படை வசதி கேட்டு பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

பொள்ளாச்சி, மே 7:  பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி 10வது வார்டில் அடிப்படை வசதிகோரி, பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு, அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் 11 வார்டுகள் உள்ளன. ஆனால் இந்த வார்டுக்குட்பட்ட பகுதிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு  எழுந்துள்ளது. இதில், சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 10வது வார்டு சக்தி விநாயகர் நகர் லேஅவுட்டில் கடந்த 15ஆண்டுகளாக போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவில்லை என்று இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அந்த வார்டு பொதுமக்கள், சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சூளேஸ்வரன்பட்டி 10வது வார்டுக்குட்பட்ட சக்தி விநாயகர் கோயில் லே அவுட் பொதுமக்கள் பலர்  நேற்று, பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் மனு ஒன்றை தெரிவித்தனர்.
 அவர்கள் கொடுத்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, ‘சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 10வது வார்டில் சுமார் 15ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம்.

 ஆனால் இப்பகுதியில், ரோடு வசதி,  சாக்கடை கால்வாய் வசதி, மின்குறைபாடு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. இதுகுறித்து புகார் தெரிவத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
 மேலும், தெருவிளக்கு வசதி மிகவும் குறைவால் இரவு நேரத்தில் இருள்சூழ்ந்த இடமாக தெரிகிறது. அந்த பகுதியில் மக்கள் நடமாட அச்சமடைகின்றனர். எனவே, இந்த மனு மீது உரிய விசாரணை மேற்கொண்டு, சூளேஸ்வரன்பட்டி 10வது வார்டுக்குட்பட்ட பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சாலை மறியல் உள்ளிட்ட பல போராட்டத்தை தொடர்வோம்’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : siege ,facility ,Panorama ,
× RELATED சென்னை ஆவடியில், மதுபோதையில் காவலரை தாக்க முயன்ற இளைஞர்