×

ரமலான் நோன்பு இன்று துவக்கம் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்காததால் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

பெரம்பலூர், மே 7: இன்று ரமலான் நோன்பு துவங்கவுள்ள நிலையில் நோன்பு கஞ்சி தயாரிக்க அரசால் வழங்கப்படும் பச்சரிசியை இன்னும் வழங்காததால் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பெரம்பலூர் தாலுகாவில் 14 பள்ளிவாசல், வேப்பந்தட்டை தாலுகாவில் 23 பள்ளிவாசல், குன்னம் தாலுகாவில் 5 பள்ளிவாசல், ஆலத்தூர் தாலுகாவில் 7 பள்ளிவாசல் என மொத்தம் 49 பள்ளிவாசல்கள் உள்ளன. இந்த பள்ளிவாசல்களுக்கு தமிழக அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் ஆண்டுதோறும் நோன்பு தயாரிப்பதற்கான பச்சரிசி வழங்கப்படும். 2019ம் ஆண்டுக்கு இன்று (7ம் தேதி) புனித ரமலான் நோன்பு துவங்கும் நிலையில் நேற்று வரை பச்சரிசி வழங்கவில்லை.
இதையடுத்து நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 49 பள்ளிவாசல்களின் நிர்வாகிகளான முத்தவல்லிகள், நாட்டாமைகள் 60க்கும் மேற்பட்டோர் திரண்டு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலகத்துக்கு சென்று முற்றுகையிட்டனர். அங்கு பள்ளிவாசல்களின் நிர்வாகிகளான வாலிகண்டபுரம் சபியுல்லா, தேவையூர் அக்பர், ரஞ்சன்குடி முகமதுகலில், சத்திரமனை லியாகத் அலி, குரும்பலூர் ஜவாஹிருல்லா, லப்பைக்கு டிகாடு சர்புதீன், டி.களத்தூர் குலாப்ஜான், பெரம்பலூர் மக்காபள்ளி சாகுல்ஹமீது, நூர்பள்ளி அபுஹனிபா என 60க்கும் மேற்பட்டோர் வழங்கல்துறை அலுவலர்களிடம் கேட்டனர்.

அதற்கு எங்களுக்கு இதுதொடர்பான உத்தரவு வரவேயில்லை, தேர்தல் நேரத்தில் அரிசி வழங்கப்படா என்று மாறி மாறி பதில் அளித்துள்ளனர். அதற்கு நாங்கள் தேர்தல் அறிவிப்புக்கு 45 நாட்களுக்கு முன்பே மனு கொடுத்துள்ளோம். இது தேர்தல் நடத்தை விதிகளின்கீழ் வராது என்று முத்தவல்லிகள் கூறினர். மேலும் உங்களது துறையின் முதன்மை செயலாளர் சில நாட்களுக்கு முன்பே அளித்துள்ள அரசாணையை பாருங்கள் என்று அதன் நகலை காண்பித்தனர். பின்னர் தங்களிடம் உள்ள அரசாணை நகல் உங்களுக்கு வரவில்லையா என்றனர். இதைதொடர்ந்து கம்ப்யூட்டரில் பரிசோதித்த அலுவலர்கள், ஆமாம் வந்துள்ளது எனக்கூறி மாவட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்துள்ளனர். இதன்பிறகு பெரம்பலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர் (பொ) மஞ்சுளா, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சம்பந்தப்பட்ட 49 பள்ளிவாசல்களுக்கு விரைவி–்ல் பச்சரிசி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.



Tags : Ramalan ,mosques ,Perambalur Collector ,
× RELATED பெரம்பலூரில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு கூட்டு தொழுகை