×

பழையாறு துறைமுகத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகள் அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கொள்ளிடம், மே 7: கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் மண்டி கிடக்கும் குப்பைகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் மாவட்டத்திலேயே இரண்டாவது பெரிய மற்றும் சிறந்த துறைமுகமாக இருந்து வருகிறது. இத்துறைமுகத்தின் மூலம் தினதோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகள், பைபர்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மூலம் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர். துறைமுக வளாகத்திலும், துறைமுகத்திலும் பல்வேறு பணிகளில் சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த துறைமுகம் மீன்பிடி துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் சுத்தம் சுகாதாரத்தை மேற்கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இந்தத் துறைமுகத்தின் நுழைவாயிலின் முன்பகுதியிலேயே சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் சிலை உள்ளது. இந்தச் சிலை அருகே குப்பைகள் குவியலாகக் கொட்டப்பட்டு சுகாதாரமின்றி காணப்படுகிறது. நுழைவாயிலின் முன்பகுதியிலேயே சீமைக்கருவேல முட்செடிகள் வளர்ந்து புதராக மண்டி கிடக்கிறது.

சிங்காரவேலர் சிலை அருகே ஊராட்சிக்குச் சொந்தமான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டிடம் கடந்த 20 வருடங்களாக எந்த பயனுமின்றி உள்ளதுஇதனை ஊராட்சி நிர்வாகமோ மீன்பிடித்துறையோ கண்டுகொள்ளவில்லை. இதனால் துறைமுகம் அசுத்தமாக காணப்படுகிறது. இந்தத் துறைமுகத்தை கண்காணிக்கும் பொருட்டு மீன்பிடி துறையின் சார்பில் அலுவலகமும் இயங்கி வருகிறது இத்துறையின் மூலம் உள்ள ஆய்வாளரின் கட்டுப்பாட்டில் இந்த அலுவலகம் இயங்கி வருகிறது. இருந்தும் சுகாதாரத்தை பாதுகாக்கவில்லை. எனவே துறைமுகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள குப்பைகள் மற்றும் முட்செடி களை அகற்ற அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.


Tags : harbor ,Palaisar ,
× RELATED துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை...