×

கொள்ளிடம் பகுதியில் குறுவை சாகுபடி பணியில் தீவிரம் காட்டும் விவசாயிகள்

கொள்ளிடம், மே 10: கொள்ளிடம் பகுதியில் குறுவை நெற்பயிர் சாகுபடி யில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டாரத்தில் வருடம் தோறும் சுமார் 3000 முதல் 4000 எக்டேர் வரை உள்ள நிலப்பரப்பில் குறுவை சாகுபடியும்,20,000 எக்டேர் நிலப்பரப்பில் சம்பா நெற்பயிற் சாகுபடியும் செய்து வருகின்றனர். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு கொள்ளிடம் பகுதியில் குறுவை மற்றும் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்யும் நிலப்பரப்பு கூடுதலாக இருந்தது. காலப்போக்கில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் வரத்து குறைந்தும் பருவ மழையின்போது விவசாயிகள் எதிர்பார்த்தது போல் பருவமழை குறைந்து போனதாலும் முன்பு பயிர் செய்த எண்ணிக்கையிலான பரப்பளவு நிலங்களில் தற்போது நெற்பயிர் சாகுபடி செய்ய முடியாது நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் வருடம் தோறும் சராசரியாக 2500 முதல் 3000 எக்டேர் வரை குறுவை நெற்பயிர சாகுபடியும் சுமார் 20000 எக்டேர் நிலப்பரப்பில் சம்பா நெற்பயிர் சாகுபடியும் செய்து வருகின்றனர். இந்த வருடம் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததோடு மட்டுமல்லாமல் மேட்டூர் அணையில் தண்ணீரின்றி வறண்டு போனதால் கொள்ளிடம் கடைமடை பகுதிக்கு பாசனத்திற்கு தண்ணீர் வராமல் இப்பகுதியில் உள்ள அனைத்து பாசன வாய்க்கால்களும் வறண்டு போய்விட்டன. வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து அற்றுப்போனதாலும் மழை குறைந்து போனதாலும் நிலத்தடி நீர் சென்ற வருடத்தை விட இந்த வருடம் அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. சில பகுதிகளில் மட்டுமே நிலத்தடி நீர் எளிதில் கிடைக்கிறது.

பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீர் மிகவும் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் சாகுபடி செய்யமுடியாத நிலையில் விவசாயிகள் இருந்து வருகின்றனர். ஆனால் சிலர் மின் மோட்டாரை பயன்படுத்தியும் கிடைக்கும் நிலத்தடி நீரை மின்மோட்டார் மூலம் எடுத்து தற்போது குருவை நெற்பயிற் சாகுபடி பணியை செய்ய துவங்கியுள்ளனர். நடவு செய்வதற்கு நாற்றங்கால் தயார் செய்வதற்கு பல நாட்களாக மழையை நம்பி விவசாயிகள் காத்திருந்தனர். விவசாயிகள் எதிர்பார்த்தது போல் மழை இல்லாமல் போனது. ஆனால் நேற்று முன்தினம் கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் கனத்த மழை பெய்தது. இந்த மழை காய்ந்த நிலங்களை நெகிழச் செய்து ஈரப்பதத்தை ஏற்படுத்தி உழவு செய்வதற்கு உதவியாக இருந்து வருகிறது. மேலும் நிலத்தடி நீரையும் பயன்படுத்தி நடவு பயிர் மேற்கொள்வதற்காக விவசாயிகள் நாற்றங்கால் தயார் செய்தும் நேரடி விதைப்பு செய்வதற்கும் நிலங்களை உழவு செய்து வருகின்றனர்.

சென்ற வருடம் கொள்ளிடம் வட்டாரத்தில் பருத்தி சாகுபடி செய்த நிலப்பரப்பு அதிகமாக இருந்ததால் குறுவை நெற்பயிர் சாகுபடி 2500 ஏக்கர் நிலப்பரப்பில் மட்டுமே செய்திருந்தனர். ஆனால் விவசாயிகள் எதிர்பார்த்தது போல் சென்ற வருடம் அறுவடை செய்த பருத்திப்பஞ்சை உரிய விலைக்கு விற்க முடியாத நிலையில் இருந்து அவதி அடைந்து வந்தனர். இதனால் இந்த வருடம் பருத்தி பயிர் சாகுபடி நிலப்பரப்பை விவசாயிகள் குறைத்துள்ளனர். இதனால் இந்த வருட குறுவை நெற்பயிற் சாகுபடியின் நிலப்பரப்பு 2000 எக்டேரிலிருந்து 3000 எக்டேராக உயர்ந்துள்ளது. தற்போது குறுவை சாகுபடி பணியை துவைக்கினால்தான் அதனைத் தொடர்ந்து வருகின்ற பருவ மழையையும், மேட்டூர் அணையின் நீரையும் வைத்து சம்பா சாகுபடியையும் தொடர்ந்து செய்ய முடியும் என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் தீவிரமாக குறுவை சாகுபடி செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாக கொள்ளிடம் வட்டார அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சிவப்பிரகாசம் பிள்ளை தெரிவித்தார்.

The post கொள்ளிடம் பகுதியில் குறுவை சாகுபடி பணியில் தீவிரம் காட்டும் விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Kuruvai ,Kollidham ,Kollidam ,Mayiladuthurai District ,Kurvai ,
× RELATED மேட்டூர் அணையை திறக்க வாய்ப்பில்லை...