×

கூலித்தொகை தராமல் இழுத்தடிக்கும் பின்னலாடை நிறுவனங்கள்

திருப்பூர், மே. 3: திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள், ‘ஜாப் - ஒர்க்’ நிறுவனங்களுக்கு உரிய காலத்தில் பணம் கொடுக்காமல் காலம் கடத்தி வருவதால், தொழிலாளர்களுக்கு சம்பளம், வாடகை, மின் கட்டணம் ஆகிய செலவுகளுக்கு பணம் இன்றி தவித்து வருகின்றனர். பின்னலாடை நிறுவனங்கள் ஜாப்-ஒர்க் நிறுவனங்களுக்கு கூலிப்பணம் விரைவாக வழங்கவேண்டும் என தொழில் பாதுகாப்பு சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து தொழில் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருப்பூர் பின்னலாடை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெரிய நிறுவனங்கள் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ஜாப்- ஆர்டர் வழங்கி வருகிறது. இதில், நிட்டிங், டையிங், காம்பாக்டிங், பிரின்டிங், எம்பராய்டரி ஆகிய பணிகளை ஜாப்-ஆர்டர் முறையில் வழங்கி பின் பெரும் பின்னலாடை நிறுவனங்கள் ஆடை தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். துணி உற்பத்தி, மதிப்பு கூட்டு சேவை என, ஜாப் - ஒர்க் முறையில் பல்வேறு வகை சேவைகளை  பெறும் பின்னலாடை நிறுவனங்கள், அதற்கான கட்டணத்தை, உடனடியாக வழங்குவதில்லை. 60 நாட்கள் கழித்த பிறகே வழங்குகின்றன.

ஜி.எஸ்.டி.,க்குப் பின் ஏற்றுமதிக்கு வழங்கப்பட்டு வந்த சலுகை விகிதங்கள் குறைக்கப்பட்டு விட்டன. இதனால், வர்த்தகம் பாதிப்பதாக கூறும் ஏற்றுமதி நிறுவனங்கள், ஜாப்- ஒர்க் கட்டணத்தை உரிய காலத்தில் வழங்காமல் இழுத்தடிக்கின்றன. ஜாப்-ஒர்க் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் கூலித்தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம், கட்டிட வாடகை, மின் கட்டணம் செலுத்த வட்டிக்கு பணம் வாங்கி கொடுக்கவேண்டிய பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வட்டிக்கு வாங்கிய பணத்தை உரிய நேரத்தில் வட்டி கூட கட்ட முடியாமல் சிரமப்படுகின்றனர்.

வட்டி அதிகரிக்கும் போது புதிதாக யாரும் பணம் கொடுக்க முன்வராத போது, கூலித்தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சில ஜாப்-ஒர்க் நிறுவனங்கள் கடன் தொல்லையால் மூடப்பட்டுள்ளது. இந்நிலை தொடர்ந்தால் ஜாப்-ஒர்க் நிறுவனங்களில் வேலை பார்க்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும். பின்னலாடை நிறுவனங்கள் ஜாப்-ஒர்க் நிறுவனங்களுக்கு காலதாமதம் இன்றி கூலித்தொகையை வழங்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : firms ,
× RELATED ரூ3,000 கோடி முதலீடு, 50,000 பேருக்கு...