×

சோழவந்தானில் இந்த கல்வியாண்டிலாவது: அரசு மகளிர் கல்லூரி அமையுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சோழவந்தான், மே 3: சோழவந்தானில் இந்த கல்வியாண்டிலாவது அரசு மகளிர் கல்லூரி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. நகரில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், சுற்றுப்புற கிராமங்களில் சுமார் ஒரு லட்சம் பேர் வசிக்கின்றனர். இப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட அரசு, தனியார் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இங்கு 12ம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்காவது திருவேடகத்தில் விவேகானந்தா கல்லூரி உள்ளது. ஆனால் மாணவிகளுக்கு ஒரு கல்லூரி கூட இல்லை. இதனால் மாணவிகள் பட்டப்படிப்பிற்கு மதுரை, உசிலம்பட்டி, கருமாத்தூர், திருமங்கலம், விருதுநகர், நிலக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. அரசியல்வாதிகள் தேர்தலின்போது மட்டும் சோழவந்தான் பகுதியில் அரசு கல்லூரி அமைப்பதாக வாக்குறுதி கொடுப்பதோடு சரி, அதன்பின் அதற்கான நடவடிக்கை எடுப்பதில்லை என இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து சமூகஆர்வலர் பாலமுருகன் கூறுகையில், ‘சோழவந்தான் பகுதி முற்றிலும் விவசாயத்தை சார்ந்துள்ளது. இங்குள்ள விவசாயிகள் பெண் குழந்தைகளை பள்ளி படிப்பு வரை சிரமமின்றி அனுப்பி விடுகின்றனர். அதன்பின் பட்டப்படிப்புக்குதான் திண்டாட வேண்டியுள்ளது. அப்படியே வெளியூர்களுக்கு அனுப்பினாலும் வீடு வந்து சேரும் வரை நிம்மதியின்றி தவிக்க வேண்டிய நிலையுள்ளது. சுமார் 4, 5 மணிநேரம் பஸ் பயணத்தில் கழிப்பதால் மாணவிகள் வீட்டிற்கு வந்ததும் அசதியால் படிக்க முவியவில்லை. தனி சட்டமன்ற தொகுதியாக இருந்தும் தமிழக அளவில் அரசு கல்லூரி இல்லாதது சோழவந்தான் மட்டும்தான் இருக்கும். புலவர் அரசஞ் சண்முககுமார், பழம்பெரும் நடிகர் டிஆர். மகாலிங்கம்,

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி, பட்டிமன்ற நடுவர் கு.ஞானசம்பந்தம் உள்ளிட்ட பிரபலாமானவர்கள் பிறந்த இவ்வூரில் இதுவரை கல்லூரி அமையாதது வேதனையான ஒன்று. அரசியல்வாதிகள் அனுமதி பெற்று தந்தால் போதும். இடத்திற்கு கூட அலைய வேண்டியதில்லை. ஆலங்கொட்டாரம் அரசஞ் சண்முககுமார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கல்லூரி அமைக்க போதிய இடவசதி உள்ளது. எனவே இப்பகுதி மாணவிகளின் நலன் கருதி புதிய அரசு கல்லூரி அமைக்க அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தற்போது அனுமதி உள்ளிட்ட பணிகளை தொடங்கினால்தான் அடுத்த கல்வியாண்டிலாவது கல்லூரி அமையக்கூடும்’ என்றார்.

Tags : government college ,Cholavan Public ,
× RELATED இளங்கலை படிப்பில் சேர முசிறி அரசு கல்லூரியில் சிறப்பு கலந்தாய்வு