×

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்

திண்டுக்கல், மே 3: திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பள்ளி செல்லாத குழந்தைகள் பற்றிய கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. 18 வயதிற்குட்பட்ட அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக கல்வி உதவித்தொகை உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. எனினும் ஒரு சில குழந்தைகள் குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிக்கு செல்லாமல் குழந்தை தொழிலாளர்களாக மாறி விடுகின்றனர். இதை தடுக்கும் வகையில் பள்ளி செல்லாத குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து பள்ளியில் சேர்க்கப்படுகின்றனர். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை காலத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்தாண்டு பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு நடந்தது. அதில் ஆயிரத்து 50 குழந்தைகள் கண்டறியப்பட்டனர். அவர்கள் அனைவரையும் 20 மையங்களில் சேர்த்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் மூலம் 1,024 பேர் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

இதை தொடர்ந்து இந்தாண்டும் பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்க அரசு உத்தரவிட்டது. கடந்த மாதம் 8ம் தேதி கணக்கெடுப்பு பணி துவங்கியது. இதில் ஒருங்கிணைந்த பள்ளி, கல்வி திட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு ஆசிரியர்கள் என 180 பேர் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி செல்லாத குழந்தைகள் மட்டுமின்றி மாற்றுத்திறனாளி குழந்தைகள் கண்டறியப்பட உள்ளனர். இதற்காக ஆசிரியர் பயிற்றுநர்களும், சிறப்பு ஆசிரியர்களும் மாவட்டம் முழுவதும் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணி வரும் மே 15ம் தேதி வரை நடக்கிறது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : school ,school children ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி