×

தீர்க்க முடியாத பிரச்னையாக உள்ள சித்திரகுப்தர் கோயில் எதிரே சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்

காஞ்சிபுரம், மே 3: காஞ்சிபுரம் சித்திரகுப்தர் கோயில் எதிரே, சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது தீராத பிரச்னையாக உள்ளது. இதற்கு, போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தப்படுகிறது.
காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகில் அன்னை இந்திராகாந்தி சாலையில் கர்ணகி அம்பாள் சமேத சித்ரகுப்த சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. சித்திரகுப்தருக்கு தென்னிந்தியாவில் காஞ்சிபுரத்தில் மட்டுமே தனிக்கோயில் அமைந்துள்ளது.இந்த கோயிலில் சித்திரகுப்தர் அவதரித்த தினமாகக் கருதப்படும் சித்திரா பவுர்ணமி தினத்தன்று, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. மேலும் பல்வேறு குடும்ப பிரச்னை, தோஷம், நோய்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள், இங்கு  வந்து சித்திரகுப்தரை வணங்கி செல்வதால், அனைத்தும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.இதற்காக, சித்திரகுப்தர் கோயிலுக்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பரிகாரத்திற்காக ஏராளமான பக்தர்கள் வந்துசெல்கின்றனர். அவரவர் ஜென்ம நட்சத்திரம் வரக்கூடிய நாட்களில் சித்ரகுப்தருக்கு நெய்விளக்கு ஏற்றி  அர்ச்சனை செய்வதன் மூலம் பாவகிரகங்களின் போக்கு மறைந்து சுபகிரகங்களின் அருள்கிட்டும் என நம்பப்படுகிறது.

குறிப்பாக, வியாழக்கிழமைகளில் சித்திகுப்தரை வழிபட்டால் நல்லறிவும், மேதாவிலாசமும், புகழும் கிட்டும். சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் ஏற்றி வழிபட்டால் தடைகள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதையாட்டி, இங்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.இந்நிலையில், இப்பகுதியில் ஏற்கனவே ஆட்டோ, டிராவல்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்த வழியில்லாமல் சாலையிலேயே நிறுத்துகின்றனர். மேலும் சாலையின்  இருபுறமும் லாரிகள், ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.முக்கிய சந்திப்பு பகுதியான இங்கு, பஸ் நிலையத்திற்கு வாகனங்கள் செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அன்னை இந்திரா காந்தி சாலையில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தாமல் இருக்க உரிய  நடவடிக்கை எடுக்க போக்குவரத்து போலீசார் முன் வரவேண்டும் என பொதுமக்களும், பக்தர்களும் வலியுறுத்துகின்றனர்.

Tags : road ,Chitragupta Temple ,
× RELATED கோழிக்கோடு பீச் சாலையில் கார்...